CRIME
மிருகமாக மாறிய அண்டை வீட்டுக்காரன்.. 3 வயது குழந்தையை காட்டில் சீரழித்து கொன்ற கொடூரம்.. நாடகமாடிய பாவி.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தின் முஸ்குரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், விளையாடிக் கொண்டிருந்த 3 வயது பெண் குழந்தை அண்டை வீட்டுக்காரரால் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற ஹீராலால் என்ற 30 வயது நபர், அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குக் கொண்டு சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். பின்னர், அந்தக் குழந்தையின் ஆடைகளைக் கொண்டே கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். கொலையைச் செய்துவிட்டு எதுவும் தெரியாதது போல் குழந்தையைத் தேடும் குடும்பத்தினருடன் இணைந்து அந்த நபர் நாடகமாடியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இதற்கிடையே, குழந்தையின் உடலைக் கைப்பற்ற வந்த காவல்துறையினரின் வாகனங்கள் மீது ஆத்திரமடைந்த கிராம மக்கள் சரமாரியாகக் கற்களை வீசி எறிந்து தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியைக் கைது செய்து திங்கட்கிழமை அதிகாலை விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது, அவன் காவல்துறையினரை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிக்க முயன்றுள்ளான். உடனே காவல்துறையினர் நடத்திய தற்காப்புத் துப்பாக்கிச் சூட்டில் குற்றவாளியின் இரு கால்களிலும் குண்டு பாய்ந்து அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். மேலும், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி குற்றவாளியின் வீட்டின் ஒரு பகுதி புல்டோசர் மூலம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. இந்த வழக்கில் தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், பாதிக்கப்பட்ட தாயின் கதறல் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது.
