CRIME
சினிமாவை மிஞ்சிய கொடூரம்.. லாரியை நிறுத்த முயன்ற நேர்மையான போலீஸ் அதிகாரிக்கு நேர்ந்த கொடூர முடிவு.. கடத்தல் கும்பலின் வெறிச்செயல்.. நெஞ்சை உலுக்கும் சோகம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் தேவஸ் மாவட்டத்தின் கதேகான் பகுதியில், இந்தூர்-பெதுல் நெடுஞ்சாலையில் சட்டவிரோத மதுபானக் கடத்தலைத் தடுப்பதற்காக வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் திலீப் குமார் பூரி, கடத்தல் லாரியால் மோதிக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நெமாவர் சாலையில் தனது காவல் குழுவினருடன் சோதனையில் ஈடுபட்டிருந்த திலீப் பூரி, சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ஒரு லாரியை நிறுத்த முயன்றுள்ளார். அப்போது காவல்துறையினரைக் கண்டதும் லாரியை நிறுத்தாமல், அதன் ஓட்டுநர் நேராக ஆய்வாளர் திலீப் பூரி மீது வாகனத்தை ஏற்றிவிட்டு தப்பியோடியுள்ளார். இதில் லாரியின் சக்கரங்களுக்கு அடியில் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நேர்மையான அதிகாரியான திலீப் குமார் பூரி, 2007-ஆம் ஆண்டு பேட்ச்-ஐச் சேர்ந்த திறமையான காவல்துறை அதிகாரி ஆவார். இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு கதேகான் காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு சக காவல்துறை அதிகாரிகள், உயர் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் முன்னிலையில் அவரது உடலுக்குக் காவல்துறையின் முழு அரசு மரியாதையுடன் ‘கார்டு ஆஃப் ஹானர்’ (Guard of Honor) எனப்படும் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. குற்றவாளிகளைப் பிடிக்க தேவஸ் மாவட்டக் காவல்துறை தனிப்படைகளை அமைத்து தீவிரத் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளதோடு, தப்பியோடிய கடத்தல் லாரி ஓட்டுநரைக் கைது செய்ய அண்டை மாவட்டக் காவல்துறையினரின் உதவியையும் நாடியுள்ளனர்.
