LATEST NEWS
அதிமுகவில் இணைந்த கையோடு சீட்..? அம்பையில் களமிறங்கும் ‘என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்’ வெள்ளத்துரை..? EPS போட்ட மாஸ்டர் பிளான்..!!
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெக கட்சியில் இணைந்தார். இதனால் காலியானதாக அறிவிக்கப்பட்ட அம்பாசமுத்திரம் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் தவெக வேட்பாளராக இசக்கி சுப்பையா மீண்டும் களம் இறங்குவார் என்று கூறப்படுகிறது.
அம்பாசமுத்திரம் தொகுதியில் திமுக தரப்பில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பனின் மகன் பிரபாகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், அதிமுக வேட்பாளராக மாவட்ட செயலாளர் ராமசுப்பிரமணியன் போட்டியிடுவார் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியும் ‘என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்று அழைக்கப்படுபவருமான வெள்ளத்துரை அண்மையில் அதிமுகவில் இணைந்துள்ளார். இவர் கடந்த சட்டசபை தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் சசிகலா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு 1,048 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். தற்போது அவர் அதிமுகவில் இணைந்துள்ளதால் அம்பை தொகுதியில் அவருக்கு ‘சீட்’ வழங்கப்படலாம் என்று தெரிகிறது. இதற்கிடையே, நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதற்கிடையே, வரும் 14-ம் தேதி, அம்பாசமுத்திரம் தொகுதிக்கு முதல்-அமைச்சர் விஜய் வருகிறார். இதனால் அந்த தொகுதியில், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
