CRIME
“சித்திரவதை செய்து கொலையா…?” பள்ளி சீருடையோடு மரத்தில் தொங்கிய மாணவி – மாணவர் உடல்கள்.. கதறும் அண்ணன்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கெரியின் மைல்கஞ்ச் பகுதியில், செவ்வாய்க்கிழமை பள்ளியிலிருந்து வீடு திரும்பாமல் காணாமல் போன ஒரு பள்ளி மாணவன் மற்றும் மாணவியின் உடல்கள், மறுநாள் புதன்கிழமை மதியம் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன. ஒரே கல்லூரியில் படித்து வந்த இவர்களின் உடல்கள் பள்ளி சீருடையிலேயே மீட்கப்பட்டன. இதில் மாணவியின் உடலில் இருந்து ரத்தம் கசிந்திருந்ததால், அவள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளதாக அவளது சகோதரர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இதற்கு காரணமான குற்றவாளிகளைத் தூக்கிலிட வேண்டும் என்றும் அவளது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு உடல்களை மரத்திலிருந்து இறக்க மறுத்தனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
செவ்வாய்க்கிழமை பள்ளி முடிந்ததும் இருவரும் ஒன்றாக வெளியேறும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன. காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், இச்சம்பவம் காதல் விவகாரத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டாலும், அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இவர்களின் மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பது முழுமையாகத் தெரியவரும் என்று காவல்துறை அதிகாரி யதுவேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.
