LATEST NEWS
அய்யய்யோ… இப்படி ஒரு சோகமா..? ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயன்று நீரில் மூழ்கிய 4 குழந்தைகள்… கதறும் குடும்பம்.. தண்ணீர் தொட்டியால் நேர்ந்த விபரீதம்..!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சாலமர் மாவட்டத்தின் ரூப்சி கிராமத்தில் நிகழ்ந்த ஒரு கோர விபத்தில், தண்ணீர் நிரம்பிய பெரிய தொட்டியில் மூழ்கி நான்கு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். குடும்பத்தினர் ரூப்சி கிராமத்தில் உள்ள ஒரு குழாய்க்கிணற்று அருகில் வேலை செய்துகொண்டிருந்தபோது, குழந்தைகள் அங்குள்ள தண்ணீர் தொட்டியின் அருகில் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு சிறுமி தொட்டிக்குள் விழுந்துவிட, அவளைக் காப்பாற்றும் முயற்சியாக மற்ற மூன்று குழந்தைகளும் தண்ணீரில் இறங்கியுள்ளனர். ஆனால், தண்ணீரின் ஆழம் அதிகமாக இருந்ததால் நான்கு குழந்தைகளும் வெளியே வர முடியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தின் தகவலறிந்த உடனே உறவினர்கள் பதறியடித்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நான்கு குழந்தைகளையும் வெளியே மீட்டு உடனடியாக ஜெய்சாலமர் ஜவஹர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அங்கு குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஒரே நேரத்தில் நான்கு குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்த இந்தத் துயரச் செய்தி அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், குடும்பத்தாரின் கதறல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
உயிரிழந்தவர்களில் ரூப்சியைச் சேர்ந்த அம்ரித்ராமின் மகன் திலீப் (18) மற்றும் சிப்லா கிராமத்தைச் சேர்ந்த நாராயண் ராம் பீலின் மகள்களான மோரு (16), தியா (14), மாயா (12) ஆகியோர் அடங்குவர். இவர்களில் மோரு, தியா மற்றும் மாயா மூவரும் உடன்பிறந்த சகோதரிகள் என்பதும், திலீப் அவர்களின் தாய்மாமன் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து அறிந்த ஜெய்சாலமர் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் ஷிவஹரே சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதுடன், உரிய விசாரணைக்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த விபத்து ரூப்சி மற்றும் சிப்லா கிராமங்களில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
