LATEST NEWS
“எப்ஸ்டீன், ஜெம் வீரமணியெல்லாம் பாவமா..? தவறு தவறுதான்..” மாணிக்கம் தாகூரின் கருத்துக்கு செல்வப்பெருந்தகை வைத்த செக்..!!
பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில் சட்டம்-ஒழுங்கு இன்னும் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும், பொதுமக்களின் எதிர்பார்ப்பை எட்டும் வகையில் முழுமையான திருப்தி அளிக்கும் நிலையில் அது இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், “திரைப்படங்களில் பேசும் வசனங்களை நிஜ வாழ்க்கையில் எளிதில் செயல்படுத்த முடியாது என்பதற்கு இந்த ஆறு மாத ஆட்சி ஒரு சாட்சி” என்று காட்டமாகச் சாடிய அவர், செஞ்சியில் காணாமல் போன சிறுமியை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்துப் பேசிய அவர், மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உரிய பாதுகாப்பு உள்ளதா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளதாகவும், தவறு செய்தவர் சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது அமைச்சராகவோ இருந்தாலும் தவறு தவறுதான் என்பதால் அரசு உடனடியாகத் தலையிட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்தி ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் கோரினார். மேலும், கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு உச்ச நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பின்படி தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்றும், முந்தைய அரசுகளைப் போலவே தற்போதைய அரசும் சட்டப் போராட்டங்களைத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, மாணிக்கம் தாகூர் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் குறித்துப் பேசியது தொடர்பான கேள்விக்கு, “அதை அரசியலாக்க வேண்டாம்” என்று குறிப்பிட்ட செல்வப்பெருந்தகை, எப்ஸ்டீன் அல்லது ஜெம் கிரானைட் வீரமணியைப் பாவம் என்று சொல்ல முடியுமா என்றும், தவறு செய்தால் அதில் எந்தச் சமரசமும் இருக்கக் கூடாது என்றும் தெரிவித்தார். இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி தவெக-வுடன் கூட்டணி மற்றும் ஆதரவு நிலைப்பாடு எடுப்பது குறித்து சமீப காலமாக கட்சியின் முன்னாள் மற்றும் இந்நாள் தலைவர்கள் வெவ்வேறு கோணங்களில் பேசி வருவதும், முக்கிய நிர்வாகிகள் மத்தியில் இந்தத் தவெக கூட்டணியை விரும்பாத உட்கட்சி முரண்கள் நிலவுவதாகவும் கூறப்படும் விமர்சனங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
