“யார் முந்திச் செல்வது..?” ஈகோவால் வெடித்த மோதல்.. நடுரோட்டில் சுற்றி வளைத்த 14 பேர் கும்பல்.. கல்லூரி மாணவருக்கு நேர்ந்த கொடூரம்.. விருதுநகரில் உச்சக்கட்ட பதற்றம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“யார் முந்திச் செல்வது..?” ஈகோவால் வெடித்த மோதல்.. நடுரோட்டில் சுற்றி வளைத்த 14 பேர் கும்பல்.. கல்லூரி மாணவருக்கு நேர்ந்த கொடூரம்.. விருதுநகரில் உச்சக்கட்ட பதற்றம்..!!

Published

on

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள வீரசோழன் பகுதியில், பைக் ஓட்டுவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகக் கல்லூரி மாணவர் ஒருவர் 14 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீரசோழன் வடக்குத் தெருவைச் சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் முருகனின் மகன் முத்துவேல் (19), அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் பயின்று வருகிறார். ஓரிரு நாட்களுக்கு முன்பு புலவர் வேலங்குடி பகுதிக்குச் சென்ற முத்துவேலுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் மற்றும் தவமுருகன் ஆகியோருக்கும் இடையே இருசக்கர வாகனத்தில் யார் முந்திச் செல்வது என்பது தொடர்பாகத் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, முத்துவேல் தனது நண்பர்களுடன் வீரசோழன் பெரிய பள்ளிவாசல் அருகே சென்று கொண்டிருந்தபோது, 6 இருசக்கர வாகனங்களில் வந்த 14 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்துள்ளது.

அப்போது அஜித்குமார் மற்றும் தவமுருகன் ஆகியோர் முத்துவேலை அடையாளம் காட்டவே, சுற்றி வளைத்த அந்தக் கும்பல் கத்தி மற்றும் அரிவாளால் அவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளது. இதில் தலை மற்றும் கைகளில் பலத்த வெட்டுக் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த முத்துவேலை, அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து முத்துவேலின் தந்தை அளித்த புகாரின் பேரில், அஜித்குமார், தவமுருகன் உள்ளிட்ட 14 பேர் மீது வீரசோழன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், இத்தாக்குதலில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கே.நெடுங்குளத்தைச் சேர்ந்த நாகராஜ் (22) என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளதோடு, தலைமறைவாக உள்ள மற்ற 13 பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in