LATEST NEWS
“துணிச்சல் இருந்தால் நீங்கள்..” திருவிளையாடல் பாணியில் தவெகவை விமர்சித்த பாஜக.. நேரடி சவால் விடுத்த நாம் தமிழர் கட்சி.. தவெக வட்டாரத்தில் பரபரப்பு..!!
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்தது முதல் பல்வேறு அரசியல் விவகாரங்கள் தொடர்ந்து விவாதப்பொருளாகி வருகின்றன. இந்நிலையில், தவெக அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில், பாஜக தமிழ்நாடு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செயற்கை நுண்ணறிவு காணொளி சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. அந்தக் காணொளியில், ‘திருவிளையாடல்’ திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் நாகேஷ் நடித்த புகழ்பெற்ற காட்சியில், சிவாஜி கணேசனின் முகத்திற்குப் பதிலாக முதல்வர் விஜய்யின் முகத்தை AI தொழில்நுட்பம் மூலம் மாற்றியமைத்துள்ளனர். அதன் மூலம், தவெக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களைக் கிண்டல் செய்யும் வகையில் வசனங்கள் அமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ, தமிழகத்தில் மட்டுமின்றி ‘டைம்ஸ் நவ்’ உள்ளிட்ட வடஇந்திய ஊடகங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.
பாஜகவின் இந்த விமர்சன காணொளி இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், இதற்கு தவெக தரப்பிலிருந்து பதிலடி கொடுக்கப்படுமா என நாம் தமிழர் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர் இடும்பாவனம் கார்த்திக் சவால் விடுத்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பாஜக வெளியிட்ட காணொளி தேசிய ஊடகங்கள் வரை விவாதமாகியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கு எதிர்வினையாக, பிரதமர் நரேந்திர மோடி அல்லது உள்துறை அமைச்சர் அமித்ஷாவை விமர்சித்து, தவெகவின் அதிகாரப்பூர்வ ஐடி விங் பக்கத்தில் இதேபோன்ற ஒரு காணொளியை வெளியிட முடியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தனது பதிவில், “அமைச்சர் ராஜ்மோகன் பாணியில் சொல்வதென்றால், துணிச்சல் இருந்தால் முதல்வர் விஜய் இதைச் செய்யச் சொல்லட்டும் பார்க்கலாம்” என்று இடும்பாவனம் கார்த்திக் நேரடியாகச் சவால் விடுத்துள்ளார். பாஜகவின் AI வீடியோவும், அதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி நிர்வாகி எழுப்பியுள்ள இந்தப் புதிய கேள்வியும் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் சூட்டைக் கிளப்பியுள்ளது. இந்த இரு பதிவுகளையும் உற்றுநோக்கும் அரசியல் விமர்சகர்கள், இதற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் எவ்வாறு எதிர்வினையாற்றப் போகிறது என்பதை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
