CRIME
காதைப் பிளக்கும் டிஜே இசை… 20 நாள் பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்… அதிக சத்தம் இதயத்தை என்ன செய்யும் தெரியுமா…? மருத்துவர்கள் விடுத்த பகீர் எச்சரிக்கை..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தில் நடைபெற்ற சிலை கரைப்பு ஊர்வலத்தின்போது, வீட்டிற்கு வெளியே அதிக சத்தத்துடன் ஒலிக்கப்பட்ட டிஜே இசையால் 20 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் டிஜே வாகனத்தைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இதேபோன்று ஒடிசா மற்றும் பீகாரில் அதிக சத்தத்தால் முதியவர் உயிரிழந்ததும், மணமகன் மயங்கி விழுந்ததும் சத்தத்தின் தீவிரத்தை உணர்த்துகிறது. திடீரென ஏற்படும் கடுமையான சத்தத்தை மூளை ஒரு ஆபத்தாக உணர்ந்து ‘போராடு அல்லது தப்பி ஓடு’ என்ற எதிர்வினையைத் தூண்டுவதால், உடலில் அட்ரினலின் ஹார்மோன் அதிகமாகச் சுரந்து இதயத் துடிப்பு வேகமடைவதாகவும், ரத்த அழுத்தம் உயர்ந்து இதயத்திற்குக் கூடுதல் சுமை ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அதிக சத்தம் என்பது காதுகளை மட்டுமே பாதிக்கும் என்ற பொதுவான எண்ணத்தைத் தாண்டி, தொடர்ந்து அதிக சத்தத்திற்கு ஆளாவது தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் நீண்ட கால இதய நோய்களுக்கு வழிவகுக்கும் என மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஏற்கெனவே இதய நோய், உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் இந்த அதிர்வுகளால் எளிதில் பாதிக்கப்படக்கூடும் என்பதால், சத்தம் கேட்ட பிறகு படபடப்பு, நெஞ்சு வலி அல்லது மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். கொண்டாட்டங்கள் என்பது மற்றவர்களின் அமைதியையும் உயிரையும் பறிப்பதாக இருக்கக் கூடாது என்பதால், குடியிருப்புகள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் அதிக திறன் கொண்ட ஒலிபெருக்கிகளைத் தவிர்த்து, அரசு நிர்ணயித்துள்ள ஒலி அளவு கட்டுப்பாடுகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டியது சமூகத்தின் முக்கியப் பொறுப்பாகும்.
