ஆந்திராவுக்குத் தேர்தல் வேலை பார்த்த கீர்த்தனா… தவெக அமைச்சரவையின் ‘துரந்தரா’…? எடப்பாடி பழனிசாமி பகீர் கேள்வி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஆந்திராவுக்குத் தேர்தல் வேலை பார்த்த கீர்த்தனா… தவெக அமைச்சரவையின் ‘துரந்தரா’…? எடப்பாடி பழனிசாமி பகீர் கேள்வி..!!

Published

on

ஆந்திர ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்துவிட்டு இங்கு அமைச்சராக உள்ள கீர்த்தனா தவெக அமைச்சரவையின் துரந்தரா? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டிற்கு புதிய தொழில்களை ஈர்க்கும் நோக்கில் ஜெயலலிதாவால் துவங்கப்பட்ட Guidance TN அமைப்பு குறித்து ஓரிரு நாட்களாக வரும் செய்திகள் மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும், அதில் பணியாற்றிய ஊழியர்கள் மீது ஊடகங்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் ஏற்கத்தக்கது அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர்களில் பெரும்பாலானோர் அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள் என்றும், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈட்டி தமிழகத்தின் தொழில்வளம் பெருக உழைத்த அவர்களின் அர்ப்பணிப்பைக் கொச்சைப்படுத்துவதை ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

2026 தேர்தலுக்குப் பின் புதிய ஆட்சி பொறுப்பேற்றதும், தொழில் முதலீடுகள் தொடர்பான அலட்சியமான அணுகுமுறைகளாலும், செய்தியாளர்கள் கேள்விக்கு அமைச்சர் “அதான் ரீல்ஸ் போட்டுட்டேனே” என்று கூறியதாலும், இனி “Guidance-க்கே Guidance இல்லை” என்ற நிலையை உணர்ந்து ஜூன் மாதமே GuidanceTN ஊழியர்களில் பெரும்பாலானோர் பணியில் இருந்து விலகியதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். 29.06.2026 அன்று அவர்களுக்கு Relieving Letter கொடுத்து அனுப்பிவிட்டு, தற்போது தங்கள் அனுபவத்தின் அடிப்படையில் வேறு மாநிலத்தில் பணிபுரிந்து வருவதைத் தவறாகச் சித்தரிப்பது தரம்தாழ்ந்த செயல் என்றும், தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் ஆந்திர மாநிலத்திற்குச் செல்வதற்கு இந்த அரசின் மற்றும் தொழில்துறை அமைச்சரின் கையாலாகத்தனமே காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement

சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு எனத் தொழில் அமைக்கப் பாதகமான சூழலில் தமிழகத்தைத் தள்ளிவிட்ட இந்த அரசு, தற்போது GuidanceTN மீது ஏற்பட்டுள்ள களங்கத்திற்கும் பொறுப்பாகி உள்ளதாகக் கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, இதற்கான உரிய விளக்கத்தை முதல்வரும் தொழில்துறை அமைச்சரும் செய்தியாளர் சந்திப்பு நடத்தித் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தொழில் ஈர்ப்பு என்பது திரையில் நடிகரைக் கண்டு ரசிகர் ஈர்க்கப்படுவது போன்றதல்ல என்றும், முறையாகப் பேசி வசதிகளைச் செய்து கொடுத்து உள்ளூர் வேலைவாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ‘Operation Mole’ என்ற கருத்தை இந்த அரசு முன்வைக்குமானால், ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்குத் தேர்தல் வேலை பார்த்துவிட்டு வந்து தற்போது அமைச்சராக இருக்கும் கீர்த்தனா தான் உங்கள் அமைச்சரவையின் ‘Dhurandhar’-ஆ என்ற கேள்விக்குப் பதில் சொல்லத் தயாராகி வருமாறும் அவர் சவால் விடுத்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in