CRIME
“வீட்டுக்குள் சடலமாகக் கிடந்த தங்கை.. பக்கத்து ஊரில் கிடந்த தந்தையின் உடல்..” சிசிடிவி-யால் உடைந்த இரட்டைப் படுகொலை மர்மம்.. திகிலூட்டும் பின்னணி..!!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், வீடு விற்ற 50 லட்சம் ரூபாய் பணம் தொடர்பான தகராறில் தனது தந்தை மற்றும் சகோதரியைக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய 26 வயது இளைஞரைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ராஜு யாதவ் என்பவர், சமீபத்தில் தனது வீட்டைச் சுமார் 50 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். அதில் 25 லட்சம் ரூபாயைத் தனது மகள் ஹர்ஷிதா யாதவிற்குக் கொடுத்த நிலையில், மீதமுள்ள தொகையைப் பிரித்துக் கொள்வது தொடர்பாக ராஜு யாதவிற்கும் அவரது 26 வயது மகன் ஹர்ஷ் யாதவிற்கும் இடையே கடும் மோதல் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், நவம்பர் 19-ஆம் தேதி ஹர்ஷிதா யாதவ் அவர்களது வீட்டிற்குள் வாய் துணியால் கட்டப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்; அவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இது குறித்துக் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, முக்கியக் குற்றவாளியான ஹர்ஷ் யாதவ் ஒரு சிறுவனுடன் இருப்பது பதிவாகியிருந்தது. இதற்கிடையே, அருகிலுள்ள மற்றொரு நகரத்தில் தந்தை ராஜு யாதவின் சடலமும் கண்டெடுக்கப்பட்டதால் இந்த வழக்கு இரட்டைப் படுகொலையாக மாறிப் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.
காவல்துறையினரின் தீவிர விசாரணையில், பணத்தின் மீது கொண்ட பேராசையால் ஹர்ஷ் யாதவ் தனது சிறுவயது கூட்டாளியுடன் சேர்ந்து இந்தக் கொடூரச் சதியைத் தீட்டியது அம்பலமானது. இதன்படி, இருவரும் சேர்ந்து முதலில் தந்தை ராஜு யாதவைக் கொன்று அவரது உடலை அப்புறப்படுத்தியதாகவும், அதனைத் தொடர்ந்து மறுநாள் வீட்டிலிருந்த சகோதரி ஹர்ஷிதாவையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த இரட்டைப் படுகொலைச் சம்பவம் தொடர்பாக ஹர்ஷ் யாதவிற்கு உடந்தையாக இருந்த சிறுவனைக் காவல்துறையினர் ஏற்கனவே கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள முக்கியக் குற்றவாளியான ஹர்ஷ் யாதவைப் பிடிக்கப் போலீசார் தனிப்படை அமைத்துத் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அவர் கைது செய்யப்பட்ட பிறகே இந்தக் கொலைச் சதி குறித்த முழுமையான விவரங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
