LATEST NEWS
“அமெரிக்காவுல ரூ.41 லட்சம் கேட்டாங்க.. ஆனா இந்தியாவுல வெறும் ரூ.4 லட்சத்துல முடிஞ்சிருச்சு..” வெளிநாட்டுப் பெண் பகிர்ந்த ஆச்சரிய அனுபவம்..!!
கிடைக்கப்பெறும் மருத்துவச் சிகிச்சை மற்றும் சிறந்த மருத்துவ வசதிகளால் இந்தியா படிப்படியாக மருத்துவச் சுற்றுலாவில் வெளிநாட்டினரின் விருப்பத் தேர்வாக மாறி வருகிறது. அமெரிக்காவில் தனது தாயின் அறுவை சிகிச்சைக்கு சுமார் 45,000 அமெரிக்க டாலர் (தோராயமாக ரூ.41 லட்சம்) செலவாகும் என மதிப்பிடப்பட்ட நிலையில், முதலில் தென் கொரியாவை யோசித்த அப்பெண், மருத்துவ நண்பரின் ஆலோசனையின் பேரில் இந்தியாவிற்கு வந்துள்ளார். இந்தியாவின் ஒரு முன்னணி மருத்துவமனையில் தங்குமிடச் செலவு உட்பட மொத்தமாக சுமார் 4,500 அமெரிக்க டாலர் (தோராயமாக ரூ.4 லட்சம்) செலவில் தாய்க்கு அறுவை சிகிச்சை செய்ததாக அவர் ‘எக்ஸ்’ தளத்தில் பகிர்ந்துள்ளார்.
மருத்துவமனையின் வசதிகள், மருத்துவர்களின் அணுகுமுறை மற்றும் சிகிச்சையின் தரம் தனது எதிர்பார்ப்பை விட மிகச் சிறப்பாக இருந்ததாக அப்பெண் பாராட்டியுள்ளார். குறைந்த செலவில் இத்தகைய தரமான சிகிச்சை கிடைத்தது தங்களது குடும்பத்திற்குப் பெரும் நிம்மதியைத் தந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், உலகம் முழுவதிலுமிருந்து வரும் நோயாளிகளை ஈர்க்க இந்தியாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருந்தாலும், வெளிநாட்டு நோயாளிகளுக்கான பயண ஏற்பாடுகள், மருத்துவமனைக்குச் செல்லும் போக்குவரத்து, தங்குமிடம், உள்ளூர் உதவி மற்றும் பாதுகாப்பு போன்ற அடிப்படை வசதிகளை மேலும் மேம்படுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தப் பதிவுக்குப் பதிலளித்த சமூக வலைதள பயனர்கள் பலரும், இந்திய மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளின் திறன் சிறப்பாக இருந்தாலும், வெளிநாட்டு நோயாளிகளுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்க வசதிகளை இன்னும் முறையாக அமைக்க வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளனர். வெளிநாட்டு நோயாளிகளின் சிகிச்சை, தங்குமிடம் மற்றும் பயணத் தேவைகளுக்கு உதவத் தனிப் பிரிவு உருவாக்கப்பட வேண்டும் என்றும், தூய்மை, நல்ல சாலைகள், நடைபாதைகள் மற்றும் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் சில பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தக் கருத்துகளை விமர்சனமாகப் பார்க்காமல், முன்னேற்றத்திற்கான வாய்ப்பாகக் கருத வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
