CRIME
“கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி செய்த சம்பவம்..” மிளகாய் பொடி தூவி போலீசுக்கே அல்வா கொடுக்கப் பார்த்த ஜோடி.. செல்போன் காட்டிய க்ளூ.. அம்பலமான அதிர்ச்சி உண்மை..!!!
நெல்லை டவுனில் பாத்திர வியாபாரி வீட்டில் 33 பவுன் நகைகள் திருடுபோனதாக அளிக்கப்பட்ட புகாரின் பின்னணியில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி ஆடிய பகீர் திருட்டு நாடகம் அம்பலமாகியுள்ளது. நெல்லை டவுன் வ.உ.சி. தெருவைச் சேர்ந்த பாத்திர வியாபாரியான பாலகுருசாமி, குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 33 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தச் சம்பவத்தை விசாரித்த தனிப்படை போலீசார், பீரோவின் பூட்டு உடைக்கப்படாமல் சாவியால் திறக்கப்பட்டிருந்ததையும், திசைதிருப்ப மிளகாய்ப் பொடி தூவப்பட்டிருந்ததையும் கண்டு சந்தேகமடைந்து விசாரணையை முடுக்கிவிட்டனர்.
இதையடுத்து, பாலகுருசாமியின் மனைவி ரேவதியின் செல்போன் அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்தபோது, அவர் சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் நவநீதகிருஷ்ணனுடன் அடிக்கடி பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பியபோது நவநீதகிருஷ்ணனுடன் ஏற்பட்ட பழக்கம், ரேவதிக்குத் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது தெரியவந்தது. கடந்த நான்கு மாதங்களாகக் கணவருக்குத் தெரியாமல் வீட்டிலிருந்த 33 பவுன் நகைகளை ரேவதி சிறுகச் சிறுக நவநீதகிருஷ்ணனிடம் கொடுத்து அடகு வைத்துச் செலவழித்துள்ளார்.
இந்நிலையில், வீட்டில் உள்ள நகைகளை அடமானம் வைத்துப் புதிய சொத்து வாங்கப்போவதாகப் பாலகுருசாமி மனைவியிடம் கூறியுள்ளார். இதனால் நகைகள் இல்லாதது கணவருக்குத் தெரிந்துவிடும் என்று அஞ்சிய ரேவதி, கள்ளக்காதலனுடன் சேர்ந்து திருட்டு நாடகமாடத் திட்டமிட்டுள்ளார். குடும்பத்தினர் வெளியூர் சென்ற நேரத்தில் நவநீதகிருஷ்ணன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்ல, ரேவதி சாவியை வைத்து பீரோவைத் திறந்து வைத்துப் பொய் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். தற்போது ஆட்டோ ஓட்டுநர் நவநீதகிருஷ்ணனைக் கைது செய்துள்ள போலீசார், இந்தச் சதித்திட்டத்தில் ரேவதியின் முழுப் பங்கு குறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
