CRIME
“அம்மாவுக்கு உடம்பு சரியில்லை..!” வழியில் காரை மறித்து மண பெண்ணைத் தூக்கிச் சென்ற பைக் ஆசாமி.. மாமனாருக்குப் போன் போட்ட மணமகன்.. காசிப்பூரில் அம்பலமான அதிர்ச்சி நாடகம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூர் மாவட்டத்தில், திருமணமான சில மணி நேரங்களிலேயே புதுப்பெண் ஒருவர் தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த விசித்திரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் முடிந்து மணமகன் வீட்டிற்குப் புதுப்பெண் காரில் அழைத்துச் செல்லப்பட்ட போது, வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் காரை மறித்துள்ளார். “உங்களது தாயாருக்கு உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது, உடனே வந்து அவரைப் பாருங்கள்” என்று அந்த வாலிபர் புதுப்பெண்ணிடம் கூறியுள்ளார். தாயின் உடல்நிலையைக் காரணம் காட்டி அந்த வாலிபர் புதுப்பெண்ணைத் தனது பைக்கில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அவர்கள் வீட்டிற்குச் செல்லாமல் நேராகத் திட்டமிட்டபடி தப்பியோடியுள்ளனர்.
மணமகனும் அவரது குடும்பத்தினரும் நீண்ட நேரம் காத்திருந்தும் மணப்பெண் வராததால், சில மணி நேரங்களுக்குப் பிறகு மணமகன் தனது மாமனாருக்குத் தொடர்பு கொண்டு மணப்பெண்ணை அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். அப்போதுதான் அந்தப் பெண் வீட்டிற்கு வரவில்லை என்பதும், கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டதும் இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்தது. விசாரணையில், அந்தப் பெண் தனது சொந்தக் கிராமத்தைச் சேர்ந்த, ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள ஒரு நபருடன் ஓட்டம் பிடித்துள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது. மேலும், தப்பியோடும் போது பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளையும் அந்தப் பெண் தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளார். இந்த விசித்திரத் திருட்டு நாடகம் குறித்து மணமகன் வீட்டார் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
