CRIME
“உங்க அப்பா டீ குடிக்கச் சொன்னாரு…” ஒரே வார்த்தையில் குடும்பத்தை ஏமாற்றி… ரூ.9 லட்சம் தூக்கிய ‘கில்லாடி’ கும்பல்..! டெல்லியில் பரபரப்பு..!!!
டெல்லியின் வடகிழக்கு பகுதியான நியூ உஸ்மான்பூரில் உள்ள சமூக ஆர்வலர் ஹரிஷ்சந்திரா என்பவரது வீட்டில், சுமார் ரூ.9 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை ஒரு மர்மக் கும்பல் கொள்ளையடித்துச் சென்றுள்ளது. திரைப்பட பாணியில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தன்று ஹரிஷ்சந்திரா வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள், அவரைச் சந்திக்க வந்துள்ளதாகக் கூறி குடும்பத்தினரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர். மேலும் ஹரிஷ்சந்திராவிடம் போனில் பேசுவது போல் நடித்து, “உங்கள் தந்தை எங்களை வீட்டிற்குள் அமர்ந்து தேநீர் அருந்துமாறு கூறினார்” என்று கூறி குடும்பத்தினரின் நம்பிக்கையைப் பெற்றுள்ளனர். இவ்வாறு தந்திரமாக வீட்டிற்குள் நுழைந்த அக்கூட்டம், வீட்டில் இருந்த ரூ.9 லட்சம் ரொக்கம் மற்றும் நகைகளைச் சுருட்டிக் கொண்டு தப்பியோடியுள்ளது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள டெல்லி காவல்துறை, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. குடும்பத்தினரை ஏமாற்றி துணிச்சலாகக் கொள்ளையடித்த அந்த மர்மக் கும்பலைப் பிடிக்கவும், அவர்களை அடையாளம் காணவும் காவல்துறை தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
