LATEST NEWS
“10 போயி இப்ப 13 ஆச்சு..” தொடர் தோல்விகளால் வெடித்த அதிருப்தி.. இபிஎஸ் தலைமைக்கு விழுந்த பலத்த அடி… முணுமுணுக்கும் ரத்தத்தின் ரத்தங்கள்..!!
2026 சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, அண்மையில் நடந்த இடைத்தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியைச் சந்தித்து 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டதால், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக மூத்த நிர்வாகிகள் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றது முதல் அதிமுக தொடர் தோல்விகளைச் சந்தித்து வருவதால், எதிர்க்கட்சிகள் அவரை ’10 தோல்வி பழனிசாமி’ என கிண்டல் செய்து வந்த நிலையில், தற்போதைய தோல்விகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது கட்சிக்குள்ளேயே உச்சக்கட்டப் பூசலை ஏற்படுத்தியுள்ளது. இதன் வெளிப்பாடாக, வரும் அக்டோபர் 15 முதல் 22 வரை நடைபெறவுள்ள அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க நாள் விசேஷ பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்க முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அதிரடியாகத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்த அதிகாரப்பூர்வ கூட்டப் பட்டியலில் கோவையில் எஸ்.பி. வேலுமணியும், திண்டுக்கல்லில் நத்தம் விஸ்வநாதனும், தர்மபுரியில் கே.பி. அன்பழகனும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சி.வி. சண்முகத்தின் பெயர் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இச்சூழ்நிலையில், தலைமை மீதான கடும் அதிருப்தி காரணமாக இந்த மூத்த தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பொதுக்கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை என முடிவெடுத்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செயற்குழு கூட்டத்திற்கு முன்பாகவே இபிஎஸ் தரப்புக்கு முட்டுக்கட்டை போட அதிருப்தி நிர்வாகிகள் வியூகம் வகுத்து வருவதால், அதிமுகவில் மீண்டும் ஒருமுறை ஒற்றைத் தலைமைப் போர் வெடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து, தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
