LATEST NEWS
சூப்பரான ஐடியா… இனி அரிசி, பருப்பு கொட்டும் கவலை இல்லை! காலி பாட்டிலில் செய்த ஸ்மார்ட் ஐடியா.. நெட்டிசன்கள் பாராட்டு…!
பொதுவாக நாம் குளிர்பானங்களை குடித்த பிறகு அதன் காலி பாட்டில்களை குப்பைத்தொட்டியில் எறிந்து விடுவோம், அல்லது சிலர் அதில் செடிகளை வளர்ப்பார்கள். ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் காலி பிளாஸ்டிக் குளிர்பான பாட்டிலை சமையலறைக்கு தேவையான ஒரு ஸ்மார்ட் சேமிப்பு கலனாக மாற்றி அசத்தியுள்ளார். இந்த புதுமையான மற்றும் எளிமையான சமையலறை யோசனை இணையவாசிகளை பெரிதும் கவர்ந்துள்ளது.
இந்த வீடியோவில், ஒரு பெரிய பிளாஸ்டிக் பாட்டிலை தலைகீழாக மாற்றி சமையலறை சுவரிலோ அல்லது ஒரு ஸ்டாண்டிலோ தொங்கவிட்டுள்ளனர். அதற்குள் அரிசி அல்லது பருப்பு போன்ற தானியங்கள் நிரப்பப்பட்டுள்ளன. பாட்டிலின் மூடிப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர்; அதன் மூலம் தேவையான போது மட்டும் தானியங்களை கீழே கொட்ட வைக்க முடிகிறது. மூடியைத் திறந்தவுடன் தானியங்கள் நேரடியாகக் கீழே உள்ள பாத்திரத்தில் விழுகின்றன, தேவையான அளவு எடுத்தவுடன் மூடியை மூடினால் தானியங்கள் கொட்டுவது உடனடியாக நின்றுவிடுகிறது. இதனால் டப்பாக்களை அடிக்கடி திறக்க வேண்டிய அவசியமோ, தானியங்கள் கீழே சிதறி வீணாகும் பயமோ இல்லை. மேலும், இது சமையலறையில் இடத்தை மிச்சப்படுத்தவும் உதவுகிறது.
இந்த வீடியோ ‘X’ தளத்தில் பகிரப்பட்டதில் இருந்து லட்சக்கணக்கான மக்களைச் சென்றடைந்துள்ளது. பல நடுத்தர மற்றும் சிறிய குடும்பங்களுக்கு இது மிகவும் பயனுள்ள மற்றும் சிக்கனமான ஐடியா என்று பலரும் பாராட்டி வருகின்றனர். இருப்பினும், சில பயனர்கள் இதற்கு மாற்று கருத்துகளையும் தெரிவித்துள்ளனர். பிளாஸ்டிக் பாட்டில்களில் நீண்ட நாட்களுக்கு உணவுப் பொருட்களைச் சேமித்து வைப்பது ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல என்றும், அவ்வாறு பயன்படுத்த நினைப்பவர்கள் பாட்டிலை நன்றாகச் சுத்தம் செய்து, குறுகிய காலத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். எது எப்படியிருந்தாலும், இந்த நபரின் தனித்துவமான படைப்பாற்றல் அனைவரையும் கவர்ந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.
