LATEST NEWS
குளுக்கோஸுக்கு பதில் மினரல் வாட்டரா..?! திண்டோரி மருத்துவமனையில் நடந்தது என்ன..? வைரல் வீடியோவுக்கு முதன்மை மருத்துவ அதிகாரி சொன்ன விளக்கம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்ட அரசு மருத்துவமனையில், விஷம் அருந்திய ஒரு நோயாளிக்கு குளுக்கோஸ் அல்லது மருந்து drips செலுத்துவதற்குப் பதிலாக 2 லிட்டர் மினரல் வாட்டர் பாட்டிலில் இருந்து திரவம் செலுத்தப்படுவதாகக் கூறி 9 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எலி மருந்து சாப்பிட்டதால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சோனு யாதவ் என்ற இளைஞருக்குச் சிகிச்சை அளித்தபோதே இந்த வீடியோ எடுக்கப்பட்டது.
மருத்துவமனைக்குச் சென்ற பிரதீப் ராஜ்புத் என்பவர், அவசர சிகிச்சைப் பிரிவில் மினரல் வாட்டர் பாட்டில் ஒன்று ஸ்டாண்டில் தொங்கவிடப்பட்டு, அதிலிருந்து ஒரு குழாய் நோயாளிக்குச் செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அதை வீடியோவாகப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, “மருத்துவமனையில் நோயாளிக்குக் குடிநீரையே ட்ரிப்பாகக் கொடுக்கிறார்கள்” என்ற செய்தி பரவி சுகாதாரத் துறையின் செயல்பாடுகள் குறித்துப் பல கேள்விகளை எழுப்பியது.
https://www.tv9hindi.com/videos
இச்சம்பவம் குறித்து திண்டோரி மாவட்ட முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் மனோஜ் பாண்டே விளக்கமளிக்கையில், நோயாளிக்கு மினரல் வாட்டர் ட்ரிப் போடப்படவில்லை என்றும், எலி மருந்து சாப்பிட்டதால் அவரது வயிற்றைச் சுத்தம் செய்யும் சிகிச்சையின்போதே தண்ணீரைப் பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார். எனினும், மருத்துவ விதிமுறைகளின்படி இச்சிகிச்சைக்கு மினரல் வாட்டர் பாட்டிலைப் பயன்படுத்தக்கூடாது என்பதால், இதில் ஏதேனும் விதிமீறல் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், தற்போது நோயாளியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.
