CRIME
“ஏன்டா என்கிட்டயே அப்படி சொல்றியா..?” கூகுளிடம் கேட்டு கணவருக்கு பாலில் தூக்க மாத்திரை… பிளான் சக்ஸஸ் ஆகாததால் படுக்கையில் விஷப்பாம்பு… மனைவியின் கொடூர சதி அம்பலம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் ஹஸ்தினாபூர் பகுதியில் நடந்த ‘பாம்பு தீண்டி கொலை செய்யப்பட்ட வழக்கு’ தொடர்பாக அதிர்ச்சியூட்டும் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வந்த அதுல் குமார் என்பவரது மனைவி தாமினி, அதே பள்ளியில் முதல்வராகப் பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் ஓட்டுநராகப் பணிபுரிந்த துஷார் என்பவருடன் தாமினிக்கு சட்டவிரோதத் தொடர்பு இருப்பது அதுலுக்குத் தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அதுல், ஓட்டுநர் துஷாரைப் பணியில் இருந்து நீக்குவதாகவும், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
வேலை பறிபோகும் மற்றும் தங்களின் ரகசியம் வெளிப்பட்டுவிடும் என்ற பயத்தில், தாமினியும் அவரது கள்ளக்காதலன் துஷாரும் இணைந்து அதுலை கொலை செய்யத் திட்டமிட்டனர். இதற்காக இணையதளங்களில் தேடியும், கொடூரமான குற்றச் சம்பவங்களைப் பார்த்தும் பல வழிகளை யோசித்துள்ளனர். முதலில் அதுலை வீதி விபத்தில் சிக்க வைத்துக்கொல்ல முயன்று தோற்ற நிலையில், இயற்கை மரணம் போலக் காட்டுவதற்காகப் பாம்பைக் விட்டுத் தீண்டவைக்கும் கொடூரமான முறையைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
திட்டமிட்டபடி, தாமினி இரவில் தனது கணவர் அதுலுக்குக் குடிக்கக் கொடுத்த பாலில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துள்ளார். அதுல் மயக்கமடைந்ததும், குழந்தைகளை வேறு அறைக்கு மாற்றிய தாமினி, கள்ளக்காதலன் துஷார் கொண்டு வந்த விஷப் பாம்பை அதுலின் படுக்கையில் விட்டுள்ளார். பாம்பு தீண்டியதில் அதுல் பரிதாபமாக உயிரிழந்தார். முதலில் இது சாதாரண பாம்புக்கடி மரணம் எனக் கருதப்பட்டாலும், காவல்துறையினரின் தீவிர விசாரணையில் தாமினி மற்றும் துஷாரின் இந்தச் சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது.
