LATEST NEWS
“அச்சச்சோ… கொஞ்சம் தவறினாலும் அவ்வளவுதான்…” பாய்ந்து வந்த காளை… தூக்கி வீசப்பட்ட ஸ்கூட்டர்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் வழக்கம் போல இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவருக்குச் சில நொடிகளில் அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சாலையோரம் இரு காளைகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு காளைச் சீறிப்பாய்ந்து வந்ததால் அப்பெண் ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டர், அருகே நிறுத்தப்பட்டிருந்த வாடகை டாக்ஸி கார் மீது பயங்கரமாக மோதியது. இச்சம்பவத்தின் அதிர வைக்கும் வீடியோ காட்சி அன்ஷுல் என்பவரால் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
அந்த வீடியோவின்படி, சாலையோரத்தில் இரு காளைகள் கொம்புகளைக் கோர்த்துக்கொண்டு தீவிரமாகச் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் காளைகளை விரட்ட முயன்றதாகத் தெரிகிறது. இதனால் மிரண்ட ஒரு காளை, சண்டையிலிருந்து விலகி திடீரெனச் சாலையை நோக்கி வேகமாக ஓடியது. அதே நேரத்தில், அந்தச் சாலையைக் கடந்து ஸ்கூட்டரில் சென்ற பெண் மீது அந்தச் சீறிப்பாய்ந்த காளை நேரடியாக மோதியது.
காளை மோதிய வேகத்தில் தடுமாறிய அந்தப் பெண்ணால் ஸ்கூட்டரைக் கட்டுப்படுத்த முடியவில்லை; நொடிப் பொழுதில் எதிர் திசையில் நின்றிருந்த காரின் மீது ஸ்கூட்டர் மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, சாலையில் அலையும் கால்நடைகளால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும், இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் (தலைக்கவசம்) அணிவதன் முக்கியத்துவம் குறித்தும் சமூக வலைதளப் பயனர்கள் கவலையுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
