LATEST NEWS
“வாங்குங்க, எங்களைக் கைது செய்யுங்க..நாங்க பயப்படல…!” போலீஸ் முன்னிலையில் முழக்கமிட்ட அபிஜித்..டெல்லியில் உச்சக்கட்ட சலசலப்பு..!!
வாக்காளர் திருத்தப்பட்டியலில் தன்னிச்சையாகச் செயல்பட்டதாக நாளிதழில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி சிஜேபி அமைப்பு இன்று டெல்லியில் பிரம்மாண்ட போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. முன்னதாக நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவி விலகக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் தொடர்ச்சியாக இந்த விவகாரம் நாடெங்கும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்தப் போராட்டத்தைத் தடுக்கும் பொருட்டு டெல்லியில் மெட்ரோ சேவைகள் மற்றும் இணையதளம் ஆகியவை முடக்கப்பட்டதோடு, பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது; இருப்பினும், இன்று காலையில் ஜந்தர் மந்தர் பகுதியில் திரண்ட சுமார் 600 போராட்டக்காரர்களைக் காவல்துறையினர் குண்டுக்கட்டாகக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவிருந்த முக்கியப் பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களைக் காவல்துறையினர் அடுத்தடுத்துக் கைது செய்தும், தடுத்து வைத்தும் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல யூடியூபரான துருவ் ரத்தே இன்று காலை டெல்லி விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மும்பையிலிருந்து டெல்லிக்கு வந்துகொண்டிருந்த சமூக ஆர்வலர் அபிஜித் விமானத்திற்குள்ளேயே வைத்துக் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டபோது, “வாருங்கள், எங்களைக் கைது செய்யுங்கள்! நாங்கள் கைது செய்யப்படுவதற்காகவே இங்கு வந்திருக்கிறோம், நாங்கள் உங்களுக்குப் பயப்படவில்லை” என்று காவல்துறையினரிடம் முழக்கமிட்ட அபிஜித், இந்த நடவடிக்கையைச் ‘சர்வாதிகாரமானது’ என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்; இவர்களுடன் பயணித்த சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா ஆகியோரும் விமானம் தரையிறங்கியதும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
