LATEST NEWS
நாட்டின் முதல் AI ஊழல்… ChatGPT மூலம் ரூ.1.74 கோடி சுருட்டல்… கைதான அகல்விளக்கு மோகன்.. புட்டு புட்டு வைத்த லஞ்ச ஒழிப்புத்துறை..!!
தமிழ்நாட்டில் உள்ள பொது நூலகங்கள் மற்றும் கோவை பெரியார் அறிவுலகத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக, ‘அகல் விளக்கு’ பதிப்பகத்தின் உரிமையாளர் ஆர். மோகனை லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் கைது செய்துள்ளனர். பள்ளிக்கல்வித் துறை செயலாளரின் கடிதம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட விரிவான விசாரணையைத் தொடர்ந்து, நவம்பர் 15, 2026 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் , ‘அகல் விளக்கு பதிப்பகம்’ மற்றும் ‘பீனிக்ஸ் பப்ளிகேஷன்ஸ்’ உரிமையாளர் மோகன் மட்டுமின்றி, பொது நூலகத் துறை, அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் பெரியார் அறிவுலகம் ஆகியவற்றின் அடையாளம் தெரியாத அரசு அதிகாரிகள் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா (BNS) 2023-ன் கீழ் கூட்டுச்சதி, மோசடி, ஆவணத் திருத்தம் ஆகிய பிரிவுகளிலும், ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் பதிப்புரிமைச் சட்டத்தின் கீழும் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையில், சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள ஒரே முகவரியிலிருந்து இரு பதிப்பகங்கள் பெயரில் 2,438 புத்தகப் பட்டியல்கள் அனுப்பப்பட்டு, அவற்றில் 1,857 புத்தகங்களுக்குக் கொள்முதல் ஆணை பெறப்பட்டது தெரியவந்துள்ளது. பரிந்துரைக் குழுவால் தேர்வு செய்யப்படாத புத்தகங்களை அதிகாரிகள் தன்னிச்சையாகச் சேர்த்ததுடன், ChatGPT போன்ற செயலிகள் மற்றும் இணையதளத் தகவல்களைக் கொண்டு கற்பனை எழுத்தாளர்கள் மற்றும் வெளிநாட்டு எழுத்தாளர்கள் பெயரில் போலிப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு தகுதியற்ற மற்றும் போலி ISBN எண்கள் கொண்ட புத்தகங்களை விநியோகித்ததன் மூலம் ரூ.1.74 கோடி (ரூ.1,74,01,162) அரசு நிதி முறைகேடாகப் பெறப்பட்டுள்ளதாக FIR-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பதிப்பகங்களும் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனவா என்பது குறித்தும், இந்தக் கூட்டுச் சதிக்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகளை அடையாளம் காண்பதற்கும் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது
