LATEST NEWS
கர்நாடகா, மகாராஷ்டிரா முன்னேறுது… தமிழ்நாடு பின்தங்குதா..? ஜி.எஸ்.டி வருவாயில் அதிரடி சரிவு… அண்ணாமலை தொடுத்த காரசாரக் கேள்வி..!!
தமிழ்நாட்டின் ஜி.எஸ்.டி. வருவாய் கடந்த சில மாதங்களாக குறைந்து வரும்நிலையில், மாநிலத்தின் வருவாயைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும் என வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது; கடந்த ஆறு மாதங்களாக தமிழ்நாட்டின் ஜி.எஸ்.டி. வருவாய் நிலை, மாநிலத்தின் பொருளாதார நிலை, அரசின் நிதி முன்னுரிமைகள் மற்றும் நிலையான வருவாயை உருவாக்குவதில் உள்ள அணுகுமுறை ஆகியவை குறித்து பல முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. பல மாதங்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த ஜிஎஸ்டி வருவாய் அக்டோபர் மாதத்தில் ஒற்றை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்திருப்பது மட்டுமே சிறிய ஆறுதலாகும். பண்டிகைக் காலம், விடுமுறைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு போன்ற பொருளாதார நடவடிக்கைகள் இயல்பாக இருக்க வேண்டிய சூழலிலும், வரி வசூலில் எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்படாதது கவலையளிக்கிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்கள் தொடர்ந்து வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் வருவாயைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும்.
அனைத்துத் துறைகளிலும் அரசின் மூலதனச் செலவினங்கள் எந்த அளவிற்கு மேற்கொள்ளப்படுகின்றன என்பதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டியது அவசியமாகும். கடந்த ஆறு மாதங்களாகப் பல்வேறு அரசுத் துறைகளில் மூலதனச் செலவினங்கள் மந்தமடைந்துள்ளதால், வேலைவாய்ப்புகள், ஒப்பந்தப் பணிகள் மற்றும் வணிக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு, அது மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியையும் பலவீனப்படுத்துகிறது. மேலும், இந்தியாவின் மொத்த தொழிற்சாலைகளில் 15.43 சதவீதத்தைக் கொண்டு முதலிடத்தில் இருக்கும் தமிழ்நாடு, தொழில்துறையின் மொத்த மதிப்புக் கூட்டலில் வெறும் 10.26 சதவீத பங்களிப்புடன் தேசிய அளவில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தப் பங்களிப்பு ஏறக்குறைய அதே நிலையில் நீடிப்பதுடன், ஒரு காலத்தில் பின்திருந்த மாநிலங்கள் இன்று வேகமாக முன்னேறி வளர்ச்சி இடைவெளியைக் குறைத்து வருவது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.
வெறும் பிராந்திய ஏற்றத்தாழ்வு அறிக்கைகள் மற்றும் திட்டங்கள் மட்டுமே மாநிலத்தின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வாகிவிடாது; வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களைக் கண்டறிந்து அவற்றுக்கெனத் தனித்துவமான பொருளாதாரத் திட்டங்களையும், நேரடி கண்காணிப்பையும் செயல்படுத்துவதுதான் உண்மையான தீர்வாக அமையும். வகுப்பில் முதலிடம் பெறும் மாணவனுக்குப் பாராட்டு எவ்வாறோ, அதேபோல் பின்தங்கிய கடைசி மாணவனுக்குத்தான் கூடுதல் கவனமும் சிறப்புப் பயிற்சியும் தேவை. அதைப் போலவே, ஏற்கெனவே வளர்ச்சியடைந்த மாவட்டங்களின் வளர்ச்சியைத் தொடர்வதுடன், பின்தங்கிய மாவட்டங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்குத் தமிழ்நாடு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
