LATEST NEWS
அய்யோ..! விளையாடச் சென்ற சிறுவன் பாழடைந்த வீட்டில் சடலமாக மீட்பு… தேடுவது போல் நாடகமாடிய நண்பனின் தாய் கைது.. பின்னணியில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள தனியாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பெரிய கருப்பன் – சத்யா தம்பதியின் 7 வயது மகன் முத்துவேல், ஞாயிற்றுக்கிழமை வீட்டின் அருகே விளையாடச் சென்றபோது திடீரென காணாமல் போனான். பெற்றோரும் கிராம மக்களும் சிறுவனைப் பல இடங்களில் தேடிய நிலையில், அப்பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த ஓட்டு வீட்டின் உள்ளே அவன் சடலமாக மீட்கப்பட்டான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்திய நிலையில், சிறுவனின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
காவல்துறையினர் முத்துவேலின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் நடத்திய தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. முத்துவேலும் அவனது வயதையொத்த சக சிறுவனும் கழுத்தை நெரித்து விளையாடும் ஒரு விபரீத விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்தச் சிறுவன் முத்துவேலின் கழுத்தில் கயிற்றைப் போட்டு நெரித்ததில் அவனுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவனைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்ற நிலையில், முத்துவேல் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
சிறுவன் உயிரிழந்ததைக் கண்ட அவனது தாயார் சந்தியா, கொலையை மறைப்பதற்காக முத்துவேலின் உடலைத் தூக்கிச் சென்று பாழடைந்த ஓட்டு வீட்டில் போட்டுள்ளார். மேலும், தன் மீது சந்தேகம் வராதவாறு கிராம மக்களுடன் சேர்ந்து சிறுவனைத் தேடுவது போல் நாடகமாடியுள்ளார். விசாரணையில் உண்மை தெரியவந்ததைத் தொடர்ந்து, தடயங்களை மறைத்த குற்றத்திற்காகச் சிறுவனின் தாய் சந்தியாவையும், அந்தச் சிறுவனையும் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலூர் அருகே உள்ள கீழவளவு காவல் நிலையத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் செய்தியாளர்களிடம் விளக்கி மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
