LATEST NEWS
“நாங்க நல்லா குடிச்சிருந்தோம்.. பயணிகள் கத்தியும் பஸ்சை நிறுத்தல” 9 பேர் பலியான பேருந்து விபத்தில் டிரைவர் கொடுத்த பகீர் வாக்குமூலம்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் யமுனா எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையில், டெல்லியில் இருந்து மஹோபா நோக்கிச் சென்ற சொகுசு ஸ்லீப்பர் பேருந்து ஒன்றில் இரவு நேரிட்ட பயங்கரத் தீ விபத்தில் 9 பயணிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். பேருந்தில் சுமார் 35 பயணிகள் பயணித்த நிலையில், 20-க்கும் மேற்பட்டோர் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் குதித்துத் தப்பினர். இந்த விபத்து தொடர்பாகப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை மதுபோதையில் இருந்த நிலையில் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஓட்டுநரும் நடத்துநரும் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், “நாங்கள் மதுபோதையில் இருந்தோம்; பயணிகள் கெஞ்சிக் கேட்டும் நாங்கள் பேருந்தை நிறுத்தவில்லை” என்று அதிர்ச்சியூட்டும் உண்மைகளை ஒப்புக்கொண்டுள்ளனர். விபத்து ஏற்படுவதற்கு முன்பாகவே பேருந்தின் முன்பகுதியில் இருந்து ஏதோ எரியும் வாசனை வருவதாகப் பயணிகள் எச்சரித்தும், போதையில் இருந்த அவர்கள் பேருந்தை நிறுத்தாமல் தொடர்ந்து இயக்கியுள்ளனர். மேலும் ஓட்டுநர் கேபினில் பீடி, சிகரெட் குடித்ததாகவும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திடீரென ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் இருந்து தீப்பற்றி எரியத் தொடங்கி, புகை மூட்டம் பேருந்து முழுவதும் வேகமாகப் பரவியதால் பயணிகள் அலறியடித்துள்ளனர். உரிய நேரத்தில் பேருந்தை நிறுத்தியிருந்தால் பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம் என ஒப்புக்கொண்டுள்ள குற்றவாளிகள், விபத்து நடந்தவுடன் பயணிகளைத் தவிக்கவிட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. உயிரிழந்த 9 பேரில் ஸ்ருதி ராவத், சரோஜ் குப்தா, மயங்க் குப்தா உள்ளிட்ட 6 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்தக் கோர விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விபத்தின் போது உண்மையில் பேருந்தை இயக்கியது யார் என்பது குறித்தும், பேருந்தின் ஆவணங்கள் மற்றும் பழைய அபராதச் சலான்கள் குறித்தும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். ஓட்டுநர்களின் அலட்சியத்தால் 9 உயிர்கள் பறிபோன இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
