Uncategorized
“என் அம்மாவையும் கொல்ல நினைச்சேன் முடியல” மனைவி, மகளை துடிக்க துடிக்க கொன்றுவிட்டு… லாரியில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர்.. நடந்தது என்ன..? திடுக்கிடும் பகீர் வாக்குமூலம்…!!
தருமபுரி கோட்டை கோயில் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 45 வயதுடைய சந்தோஷ் என்பவர் தனது மனைவி சரண்யா (35) மற்றும் 14 வயது மகள் சாத்விகா ஆகியோருடன் வசித்து வந்தார். ரியல் எஸ்டேட், பங்குச்சந்தை மற்றும் ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து வந்த சந்தோஷிற்குச் சமீபகாலமாகக் கடுமையான கடன் சுமை ஏற்பட்டு, கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால் நேற்று காலை தனது மனைவி சரண்யாவைக் கழிவறைக்கு அழைத்துச் சென்று கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், தனியார் பள்ளி விடுதியில் தங்கி 9-ஆம் வகுப்பு படித்து வந்த மகள் சாத்விகாவை வீட்டிற்கு அழைத்து வந்து, சுத்தியலால் தலையிலேயே அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
நேற்று காலை சரண்யாவின் பெற்றோர் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றபோது அழைப்பு ஏற்கப்படாததால், சந்தேகமடைந்து நேரில் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அங்குச் சரண்யா கழிவறையில் சடலமாகவும், மகள் சாத்விகா ஹாலில் தலை சிதறிய நிலையிலும் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையே, தருமபுரி அருகே புறவடை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் லாரி முன்பாகப் பாய்ந்து விபத்தில் உயிரிழந்ததாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. போலீசார் அங்குச் சென்று விசாரித்ததில், விபத்தில் இறந்தவர் தன் குடும்பத்தைக் கொன்றுவிட்டுத் தப்பியோடிய தொழிலதிபர் சந்தோஷ் என்பது உறுதி செய்யப்பட்டது.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாகச் சந்தோஷ் சில அதிர்ச்சியூட்டும் வீடியோக்களைப் பதிவு செய்து வைத்துள்ளார். அந்த வீடியோவில், “என் சாவுக்கு யாரும் காரணமில்லை, கடன் சுமை அதிகரித்ததால் என் மனைவி, மகளை நான்தான் கொன்றேன்; என் தாயையும் கொல்ல நினைத்தேன் ஆனால் முடியவில்லை” என்று கூறியுள்ளார். மேலும், “என் மனைவியின் வங்கிக் கணக்கில் ரூ. 45 லட்சம் இருக்கிறது, அதை எடுத்து கடனை அடைத்துவிடுங்கள்” எனக் கூறி சிலரது பெயர்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரே குடும்பத்தில் மூன்று உயிர்கள் பலியான இந்த கொடூரச் சம்பவம் குறித்து தருமபுரி மாவட்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
