Uncategorized
மூளை, சிறுநீரகம், குடல் வரை அத்தனையும் காலி.. வெளிநாட்டில் மாரடைப்பால் இறந்ததாகக் கூறப்பட்ட இந்திய மாலுமி.. உடலுறுப்புகள் திருடப்பட்டதா..? உடற்கூறாய்வில் வெளிவந்த கொடூரம்..!!
வெனிசுலா நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய மாலுமி ராகேஷ் சவுகானின் உடல், உள் உறுப்புகள் எதுவுமின்றி வெறும் எலும்புக்கூடாக தாய்நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியா பகுதியைச் சேர்ந்த 33 வயதான ராகேஷ் சவுகான், கடந்த மே மாதம் கப்பலில் ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு மாதத்திற்குப் பிறகு அவரது உடல் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டபோது, வெனிசுலா அரசுத் தரப்பில் எந்தவொரு உடற்கூறாய்வு அறிக்கையும் வழங்கப்படவில்லை.
இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இந்தியாவில் மீண்டும் உடற்கூறாய்வு செய்யக் கோரினர். அப்போது இந்திய மருத்துவர்கள் நடத்திய சோதனையில், ராகேஷின் உடலில் மூளை, இதயம், இரண்டு நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், மண்ணீரல், கணையம், வயிறு மற்றும் குடல் உள்ளிட்ட எந்தவொரு முக்கிய உள் உறுப்புகளும் இல்லை என்ற அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. கழுத்தில் இருந்து அடிவயிறு வரையிலும், ஒரு காதில் இருந்து மறு காது வரையிலும் உடல் முழுவதும் தையல்கள் மட்டுமே போடப்பட்டிருந்தன. உள் உறுப்புகள் எதுவும் இல்லாததால் இந்திய மருத்துவர்களால் அவரது மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய முடியாமல் போனது.
இந்த கொடூரமான விவகாரம் தொடர்பாக, இந்திய மாலுமிகள் சங்கங்களின் கூட்டமைப்பு (FSUI) தீவிர விசாரணைக்கு வலியுறுத்தியுள்ளதுடன், வெளிநாடுகளில் உள்ள இந்தியப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்துக் கவலை தெரிவித்துள்ளது. கப்பல் நிறுவனம் முதலில் ராகேஷ் கீழே விழுந்து காயமடைந்ததாகக் கூறிய நிலையில், பின்னர் மாரடைப்பால் இறந்ததாகக் கூறி முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்துள்ளதாக அவரது தந்தை குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் வெனிசுலாவில் உள்ள இந்திய தூதரகம் உடனடியாகத் தலையிட்டு, முழுமையான விசாரணை நடத்தி தங்களுக்கு நீதி மற்றும் உரிய இழப்பீட்டைப் பெற்றுத்தர வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
