CRIME
“பாசமாவது, கத்திரிக்காயாவது…” 3 நாட்களாக அழுகிய முதியவரின் சடலம்.. இறுதிச்சடங்கை நிறுத்திவிட்டு குடும்பத்தினர் செய்த அநாகரிக காரியம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
தெலங்கானா மாநிலம் ராஜண்ணா சிர்சில்லா மாவட்டம் கொனாயிபள்ளி கிராமத்தில், 80 வயதான கொங்கட்டி சந்திரையா என்ற முதியவர் வயது முதிர்வு மற்றும் நோய் பாதிப்பு காரணமாகத் திங்கட்கிழமை இரவு காலமானார். அவரது மரணத்திற்குப் பின், குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்து இறுதிச்சடங்கு செய்வதற்குப் பதிலாக, முதியவரின் சொத்தைப் பிரிப்பது தொடர்பாகக் கடுமையான சண்டையில் ஈடுபட்டனர். இதனால், அந்த முதியவரின் சடலம் இறுதி மரியாதை செய்யப்படாமல் திங்கட்கிழமை இரவு முதல் புதன்கிழமை இரவு வரை மூன்று நாட்களாக வீட்டிலேயே கிடந்த அவலம் நேர்ந்துள்ளது.
மரணமடைந்த சந்திரையாவுக்கு ஒரு வீடும் ஒன்றரை ஏக்கர் விவசாய நிலமும் சொந்தமாக இருந்துள்ளது. அவருக்கு மூன்று மகள்கள் இருந்த நிலையில், அவரது மகன் நாகராஜு 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். சந்திரையா தனது வாழ்நாளிலேயே வீட்டை மகள்களுக்கு எழுதி வைத்திருந்ததாகக் கூறப்படும் நிலையில், அவரது மரணத்திற்குப் பின் மகனின் இரண்டாவது மனைவியும் அவரது இரு மகள்களும் சொத்தில் பங்கு கேட்டுப் பிடிவாதம் பிடித்தனர். கிராம மக்களும் உள்ளூர் பெரியவர்களும் எவ்வளவோ சமாதானம் பேசியும், சொத்துரிமைச் சண்டையில் பிடிவாதமாக இருந்த குடும்பத்தினரால் எந்தவொரு உடன்பாட்டிற்கும் வர முடியவில்லை.
கிராம மக்களின் சமரச முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்த விசித்திரமான சொத்து தகராறு விவகாரம் காவல்துறையின் கவனத்திற்குச் சென்றது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இருதரப்பினரையும் கடுமையாக எச்சரித்து தற்காலிகமாகப் பிரச்சினையைத் தீர்த்து வைத்தனர். காவல்துறையினரின் தலையீடு மற்றும் உதவியுடன், மூன்று நாட்களாக வீட்டிலேயே கிடந்த சந்திரையாவின் சடலத்திற்குப் புதன்கிழமை இரவு ஒருவழியாக இறுதிச்சடங்குகள் நடத்தி முடிக்கப்பட்டன. உறவுகளின் பாசத்தை விடப் பணமும் நிலமும் மேலோங்கி நிற்கும் இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
