LATEST NEWS
பகீர்..! “எங்க உயிருக்கு ஆபத்து” தொழிற்சாலை உரிமையாளரை அடித்தே கொன்ற பொதுமக்கள்.. புகை அதிகமாக வெளியேறியதால் ஆத்திரம்….!!
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தின் கங்கோஹ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லர்ஹேடி கிராமத்தில், புதிதாக அமைக்கப்பட்ட டயர் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை காரணமாக இப்பகுதியில் கடுமையான சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாகப் பேசுவதற்காக சலார்புரா, கல்லர்ஹேடி மற்றும் சனௌலி ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் வெள்ளிக்கிழமை இரவு தொழிற்சாலைக்குச் சென்றுள்ளனர். அப்போது தொழிற்சாலை உரிமையாளரான அர்பீன் சௌஹான் மற்றும் கிராம மக்களுக்கு இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தை திடீரென கடுமையான வாக்குவாதமாக மாறி, பின்னர் இருதரப்பு மோதலாக வெடித்தது.
இந்த மோதலின் போது, கிராம மக்கள் இரும்பு கம்பிகள் மற்றும் ஆயுதங்களால் தொழிற்சாலை உரிமையாளர் மற்றும் அவரது தரப்பினர் மீது பயங்கர தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த தொழிற்சாலை உரிமையாளர் அர்பீன் சௌஹான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவரது மருமகன் சாதிக் என்பவரும், மற்றொரு தரப்பைச் சேர்ந்த சஞ்சய் (என்கிற சந்தீப்) என்பவரும் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறை மற்றும் கொடூரக் கொலைச் சம்பவம் முழுவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அர்பீனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சிசிடிவி காட்சிகளின் ஆதாரங்களின் அடிப்படையில், முதற்கட்டமாக 11 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, கிராம மக்களின் புகார்கள் குறித்தும், இந்த வன்முறை குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
