LATEST NEWS
“இனி எப்படி இட்லி சுடுவேன்..?” 2 மாசமா நின்றுபோன இலவச கேஸ்.. கண்ணீருடன் நின்ற கமலாத்தாள் பாட்டி.. உடனே களமிறங்கிய கலெக்டர்..!!
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த வடிவேலம்பாளையம் பகுதியை சேர்ந்த 85 வயதான கமலாத்தாள் பாட்டி, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை, எளிய மக்களின் பசியை போக்கும் வகையில் வெறும் 1 ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வருகிறார். தொடக்கத்தில் விறகு அடுப்பில் சமைத்து வந்த இவருக்கு, இவரது சேவையை பாராட்டி கடந்த 10 ஆண்டுகளாக இலவச கியாஸ் சிலிண்டர் வழங்கப்பட்டு வந்தது.
கடந்த இரண்டு மாதங்களாக இவருக்கு வழங்கப்பட்டு வந்த இலவச கியாஸ் சிலிண்டர் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் 1 ரூபாய்க்கு தொடர்ந்து இட்லி சுட்டு விற்க முடியாமல் கமலாத்தாள் பாட்டி பெரும் சிரமத்திற்கு ஆளானார். இலவச சிலிண்டர் நிறுத்தப்பட்டதற்கான காரணம் புரியாமல் தவித்த கமலாத்தாள் பாட்டி, மீண்டும் தமக்கு வழக்கம்போல் இலவச கியாஸ் உருளை வழங்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார்.
கமலாத்தாள் பாட்டியின் இந்த நிலையைக் கேட்டறிந்த கோவை மாவட்ட ஆட்சியர், அவருக்கு எந்தவித தடையுமின்றி மீண்டும் தொடர்ச்சியாக இலவச கியாஸ் சிலிண்டர் வழங்கிட உரிய அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிட்டார்.
