LATEST NEWS
செங்கடலில் பாய்ந்த ஏவுகணைகள்…! சவுதி எண்ணெய் டேங்கர் மீது… தாக்குதல் நடத்தி ஹவுதிகள் கெடுபிடி..!!
ஈரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த சவுதி அரேபியாவிற்குச் சொந்தமான இரண்டு எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். சவுதியின் அல் சுகைக் பகுதிக்கு தென்மேற்கே, சர்வதேச அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பாப் எல் மண்டேப் ஜலசந்திக்கு அருகே இச்சம்பவம் நடந்துள்ளது. சவுதி அரசு தங்களது கட்டுப்பாட்டுப் பகுதிகளை முற்றுகையிட்டுள்ளதற்குப் பதிலடியாக, சவுதி கப்பல்களுக்குக் கடல்சார் தடை விதிப்பதாக ஹவுதிகள் அறிவித்ததைத் தொடர்ந்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக இதில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாப் பகுதிகளில் பாதுகாப்புச் சூழல் வேகமாகச் சீர்குலைந்து வருகிறது. இதனால் ஏடன் வளைகுடா வழியே பயணிக்கவிருந்த பல வணிகக் கப்பல்கள் தங்களது பயணத்தை நிறுத்திவிட்டுத் திரும்பிச் சென்றுள்ளன. Kpler தரவுகளின்படி, ஹோர்முஸ் மற்றும் பாப் எல் மண்டேப் ஆகிய இரு முக்கிய ஜலசந்திகள் வழியிலான சர்வதேசக் கப்பல் போக்குவரத்து கணிசமாகக் குறைந்து பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது
கடல்சார் பாதைகளில் தொடரும் இத்தகைய தாக்குதல்களால், சர்வதேசச் சரக்குக் கப்பல்கள் நீண்ட சுழற்சிப் பாதைகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. இதன் காரணமாகச் சரக்குக் கட்டணம் கடுமையாக உயர்வதோடு, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கிடையே, ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் தாக்கப்பட்டால் ஈரானின் மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் தரைமட்டமாக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளதால் மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
