LATEST NEWS
“உயிரோட வீடு திரும்புவேனான்னு தெரியல..” கதறி அழுத கணவன்… உக்ரைன் போர்க்களத்தில் சிக்கிய இந்திய இளைஞரின் அலறல் குரல் பதிவு..!!
தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம், சிரிகொண்டா மண்டல் பகுதியைச் சேர்ந்த சிர்சு அசோக் என்ற நபர், தோட்டப் பராமரிப்பு வேலைக்காக வேலைவாய்ப்பு முகவர் மூலம் ரஷ்யாவுக்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கு சென்ற பிறகு அவர் ரஷ்ய ராணுவத்தில் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு துப்பாக்கியால் சுடுவது மற்றும் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு, உக்ரைன் போரில் முன்களப் பகுதிகளில் அவர் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அசோக் தனது செல்போன் மூலம் அனுப்பிய குரல் பதிவில், தன்னைச் சுற்றிலும் பலர் இறந்துவிட்டதாகவும், தானும் கடுமையான ஆபத்தில் இருப்பதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும், பான்ஸ்வாடாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும், உடன் வந்தவர்களில் 50 பேர் இறந்துவிட்ட நிலையில் தற்போது தாங்கள் இரண்டு பேர் மட்டுமே மிச்சமிருப்பதாகவும், தனக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையிலும் ராணுவத்தில் தன்னை நடக்குமாறு வற்புறுத்துவதாகவும் அவர் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், அவர் கூறிய உயிரிழப்புகள் குறித்த தகவல்களை ஊடகத்தால் உடனடியாக உறுதிப்படுத்த இயலவில்லை.
இதேபோல், தெலங்கானாவைச் சேர்ந்த அஃப்சல் கான் என்பவரும் ரஷ்ய ராணுவத்தில் சிக்கியுள்ள நிலையில், அவரது நிலை என்னவென்று தெரியாமல் குடும்பத்தினர் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். ஏற்கனவே இந்தியர்கள் யாரும் ரஷ்ய ராணுவத்தில் சேர வேண்டாம் என மத்திய அரசு எச்சரித்துள்ள நிலையில், இதுவரை 139 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 51 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தெலங்கானாவில் இருந்து ரஷ்ய ராணுவத்தில் சிக்கியுள்ள எஞ்சியவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் இந்திய வெளியுறவு அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது.
