Uncategorized
உலகமே அதிர்ச்சி..! “நாங்க தான் கொன்றோம்” 335 தோட்டாக்கள்.. அலறிய மழலைக் குரல்… 5 வயது சிறுமி ஹிந்த் ரஜப் படுகொலைக்கு முதன்முறையாக பொறுப்பேற்றது இஸ்ரேல்.. விசாரணைக்கு உத்தரவு..!!
காசாவில் 5 வயது பாலஸ்தீன சிறுமி ஹிந்த் ரஜப் மற்றும் அவளது குடும்பத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இஸ்ரேல் ராணுவம் முதன்முறையாக தற்போது அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளது. சர்வதேச அளவில் எழுந்த கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து முறையான குற்றவியல் விசாரணை தொடங்கப்படும் என்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. தங்களின் ராணுவ எச்சரிக்கைகளை மீறி அந்த வாகனம் சென்றதால் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் புதிய விளக்கம் அளித்துள்ளது.
கடந்த ஜனவரி 29, 2024 அன்று காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, ஹிந்த் ரஜப் மற்றும் அவளது குடும்பத்தினர் பயணித்த கார் மீது இஸ்ரேலிய ராணுவம் பீரங்கியில் இருந்து 335 தோட்டாக்களைச் சுட்டுத் தாக்குதல் நடத்தியது. இதில் காரில் இருந்த அனைவரும் கொல்லப்பட, காயங்களுடன் தப்பிய சிறுமி ஹிந்த், மீட்பு அமைப்பான ரெட் கிரசண்டிற்கு போன் செய்து பயத்துடன் உதவி கோரினாள். எனினும், இறுதியில் சிறுமி ஹிந்த் மற்றும் அவளை மீட்க வந்த இரண்டு ஆம்புலன்ஸ் ஊழியர்களும் இஸ்ரேல் படையினரின் அடுத்தகட்ட துப்பாக்கிச்சூட்டில் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
சர்வதேச நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கவும், தங்களது படைகளின் தவறுகளை தாங்களே ஆய்வு செய்யத் தயார் என்பதைக் காட்டவுமே இஸ்ரேல் இந்த விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஹிந்தின் மரணம் மட்டுமின்றி, 2025 மார்ச் மாதத்தில் ராஃபாவில் ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஐ.நா வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும் இந்த ராணுவ காவல் குற்ற புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தவுள்ளது.
