LATEST NEWS
“எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றாதீங்க…!” ஹிருத்திக் ரோஷனை வெளுத்து வாங்கிய கங்கனா..!!
சமூக வலைத்தளங்களில் ‘சாரி ஹிருத்திக் ரோஷன்’ என்ற ஹேஷ்டேக் வைரலானதைத் தொடர்ந்து, தனக்கு எதிராக வெளியிடப்படும் கருத்துகளுக்கு கண்டனம் தெரிவிக்காமல் அதற்கு ஆதரவளிக்கும் வகையில் நடந்துகொள்வது சரியானதல்ல என ஹிருத்திக் ரோஷனுக்கு நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காக்ரோச் ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் சௌரவ் தாஸுடனான வார்த்தைப் போரின்போது, சௌரவ் தாஸ் தன்னை ஹிருத்திக் ரோஷனுடன் ஒப்பிட்டுப் பேசியதைத் தொடர்ந்து, 2016-ல் கங்கனா – ஹிருத்திக் இடையே நடந்த பழைய மோதல் குறித்த கருத்துக்கள் மீண்டும் இணையத்தில் பேசப்படத் தொடங்கின.
இந்தச் சூழலில், மக்கள் சமூக ஊடகக் கருத்துக்களைப் பின்பற்ற வேண்டாம் என நடிகர் ஹிருத்திக் ரோஷன் கேட்டுக்கொண்டார். இதற்கிடையே இன்ஸ்டாகிராமில் பிரெட்டி பேர்டி என்பவரின் பதிவிற்கு பதிலளித்த ஹிருத்திக், “சரியான சூழல் மற்றும் உண்மைகளின் அடிப்படையில் அமையும் தருணத்திற்காக நான் காத்திருப்பேன்” என்று பதிவிட்டிருந்தார். தனது பழைய கதை குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், அதற்கு கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் ஹிருத்திக் கருத்து பதிவிட்டுள்ளதாக கங்கனா ரனாவத் சாடினார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கங்கனா வெளியிட்ட பதிவில், “எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதை நிறுத்துங்கள்; உங்களின் சரியான துணையான சபா ஆசாத்துடன் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். ஆனால், இதுபோன்ற கருத்துக்கள் மூலம் என்னைச் சீண்ட வேண்டாம். உறுதியான உறவில் இருக்கும் நீங்கள் இப்படி ஒரு பெண்ணைக் கிண்டல் செய்வது சரியாகாது. உங்கள் பெயரைப் பயன்படுத்தி என்னைத் துன்புறுத்துபவர்களை நீங்கள் கண்டிக்க வேண்டும். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதையும், உங்கள் துணையை அவமானப்படுத்துவதையும் நிறுத்துங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
