CRIME
உச்சகட்ட கொடூரம்.. நடுவானில் வெடித்துச் சிதறிய ராணுவ விமானம்.. 32 அதிகாரிகளுக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
நைஜீரியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஒண்டோ மாகாணத்தில், 32 பேருடன் சென்ற நைஜீரிய விமானப்படைக்குச் சொந்தமான ராணுவ விமானம் ஒன்று திங்கள்கிழமை காலை விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். பெனின் நகரத்திலிருந்து நாட்டின் பொருளாதார மையமான லாகோஸ் நகருக்குத் தனது வழக்கமான பயணத்தை மேற்கொண்ட ATR-42 ரக ராணுவ விமானம், உள்ளூர் நேரப்படி காலை 9:13 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. அதன் பின்னர், இக்போகோடா என்ற கடலோரப் பகுதியிலுள்ள கடற்படைத் தளத்திற்கு அருகே சதுப்புநிலக் காட்டுப்பகுதியில் இந்த விமானம் விழுந்து நொறுங்கி முற்றிலும் தீக்கிரையானது. இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் இருந்த 25 பயணிகள் மற்றும் 7 ஊழியர்கள் உட்பட மொத்தம் 32 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தக் கொடூர விமான விபத்து குறித்து நைஜீரிய அதிபர் போலா டினுபு தனது ஆழமான இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, நாடு முழுவதும் மூன்று நாட்களுக்குத் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும், விபத்து நிகழ்ந்த பகுதி மிகவும் சேறும் சகதியுமான சதுப்புநிலமாக இருந்ததால், மீட்புக் குழுவினர் படகுகள் மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்து உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நைஜீரிய வரலாற்றில் மிக மோசமான ராணுவ விமான விபத்துகளில் ஒன்றாகக் கருதப்படும் இச்சம்பவத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் அறியப்படாத நிலையில், விபத்து குறித்து உடனடியாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு விமானப்படைக்கு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
