LATEST NEWS
“ஏர்போர்ட் வேண்டாம்… புதிய தொழிற்சாலைகள் வரும்..!” நிலத்தை இழந்து தவித்த மக்களுக்கு மாற்று தொழில் திட்டங்கள் தொடக்கம்..! சட்டசபையில் அமைச்சர் கீர்த்தனா அதிரடி அறிவிப்பு..!!
தமிழ்நாடு சட்டசபையில் இன்றைய மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்தது குறித்து பெரும் விவாதம் நடைபெற்றது. அப்போது தி.மு.க. – த.வெ.க. உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எடப்பாடி பழனிசாமி, “பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தை என்ன செய்யப்போகிறீர்கள்?” என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் நிர்மல்குமார், 5 வருடமாக கையகப்படுத்திய நிலங்கள் அனைத்தும் வெளியூரில் வசிப்பவர்களுடையது என்றும், உள்ளூரில் வசிக்கும் யாருடைய நிலங்களையும் தமிழக அரசு இதுவரை கையகப்படுத்தவில்லை என்றும், பரந்தூர் நிலங்களை என்ன செய்வது என பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் கீர்த்தனா, பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மக்களுக்கும் மண்ணுக்கும் இடையூறு இல்லாத தொழில்களும், வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் மாற்று தொழில் திட்டங்களும் தொடங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், மழை பெய்யாமல் இருந்தாலும் விவசாயம் நடக்கும் விளைநிலம் என்பதாலும், பரந்தூரை விமான நிலையமாக மாற்றினால் கண்டிப்பாக சென்னைக்குள் வெள்ளம் வரும் அபாயம் உள்ளதாலும் தான் இத்திட்டம் ரத்து செய்யப்பட்டது என்றார். 1,500 நீர்நிலைகள் மற்றும் 1,000 குடும்பங்கள் பாதிக்கும் என்பதை கருதாமல் பரந்தூர் நிலத்தை தேர்வு செய்தது தவறு எனக் கூறிய அவர், மக்கள் பாதிக்காதவாறு 2-வது புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்றும், நிலம் எடுப்பது தொடர்பாக திமுக ஆட்சியில் அமைத்த குழுவின் அறிக்கையை வெளியடாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து பேசிய அமைச்சர் வன்னி அரசு, திமுகவுடன் கூட்டணி இருந்தபோதே பரந்தூர் திட்டத்தை எதிர்த்து போராடியதாகவும், பரந்தூர் விவசாய நிலங்களும் மண்ணின் மைந்தர்களும் தவெக அரசால் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார். இதற்கு விளக்கமளித்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, விமான நிலையம் அமைப்பது மத்திய அரசுக்கு உட்பட்டது என்றும், மாநில அரசின் சார்பில் குழு அமைக்கப்பட்டு மூன்று அமைச்சர்கள் நேரடியாக காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளிடம் பேசியதாகவும் தெரிவித்தார். 13 கிராமங்களில் 11 கிராமங்கள் ஒத்துக் கொண்ட நிலையில், ஏகனாபுரம் மற்றும் பரந்தூர் ஆகிய இரண்டு கிராமங்கள் மட்டுமே ஒத்துக் கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.
