LATEST NEWS
“இப்படி எல்லாத்துலயும் அரசியல் பண்ணா தமிழ்நாடு எப்படி உருப்படும்.?” ஒரு டிரில்லியனும் வராது.. ஒன்றரை டிரில்லியனும் வராது.. சட்டப்பேரவையில் டென்ஷானாகி கொந்தளித்த சிவி சண்முகம்…!!
தமிழகத்தில் நிலவும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளால் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்படுவதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.வி. சண்முகம் சட்டப்பேரவையில் ஆவேசமாகக் குற்றம்சாட்டியுள்ளார். முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் தொலைநோக்கு பார்வையுடன் கொண்டு வரப்பட்ட சென்னை – சேலம் இடையேயான 8 வழிச்சாலைத் திட்டத்தைப் பழிவாங்கும் அரசியலோடு திமுக அரசு ரத்து செய்தது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அதேபோல, கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பரந்தூர் பசுமை வழி விமான நிலையத் திட்டத்தைத் தற்போதைய தவெக அரசும் ரத்து செய்துள்ளதாக சி.வி. சண்முகம் கடுமையாக விமர்சித்தார். முந்தைய அரசுகள் கொண்டு வரும் மக்கள் நலன் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களை, அடுத்தடுத்து ஆட்சிக்கு வரும் புதிய அரசுகள் தங்களின் அரசியல் காரணங்களுக்காகத் தொடர்ந்து முடக்கி வருவதாக அவர் வேதனை தெரிவித்தார்.
மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் தொடர்ந்து அரசியல் செய்து கொண்டே போனால், தமிழகத்திற்கு ஒரு டிரில்லியன் பொருளாதாரமும் வராது, ஒன்றரை டிரில்லியன் பொருளாதாரமும் வராது என்று அவர் காட்டமாக எச்சரித்தார். தமிழ்நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தும் இத்தகைய திட்ட ரத்து நடவடிக்கைகளை விடுத்து, தொலைநோக்கு திட்டங்களைச் செயல்படுத்த அனைத்துக் கட்சிகளும் முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
