LATEST NEWS
“ஜி ஸ்கொயர் மாப்பிள்ளைக்கு நிலம் வாங்குனீங்களா… அப்போ லாட்டரி மருமகனுக்கு ஏர்போர்ட் கட்டுறீங்களா..?” பரந்தூர் விவகாரத்தில் சட்டசபையை அதிரவைத்த காரசார விவாதம்…!!
தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டத்தை த.வெ.க. அரசு ரத்து செய்த விவகாரம் பெரும் காரசார விவாதத்தை ஏற்படுத்தியது. விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. ஆஸ்டின், தொழில்துறை வளர்ச்சிக்கு பொருளாதாரமே அடித்தளம் என்றும், பரந்தூர் திட்டத்தை ரத்து செய்தது முதலீட்டாளர்களைப் பாதிக்கும் என்றும் குற்றம்சாட்டினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, முதலமைச்சர் விஜய் எப்போதும் விவசாயிகள் பக்கமே நிற்பார் என்று கூறி, ஊழலற்ற ஆட்சியைத் தருவதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 10 மடங்கு தொழில் முதலீடுகளை ஈர்த்துக் காட்டுவோம் எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் எடப்பாடி பழனிசாமி, பரந்தூர் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட 90 சதவீத நிலங்களை மீண்டும் விவசாயிகளுக்கே திரும்ப வழங்கப் போகிறீர்களா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் நிர்மல்குமார், திட்டத்திற்குத் தேவையான நிலத்தில் 90 சதவீதம் கையகப்படுத்தப்படவில்லை என்றும், 48 சதவீதமான 1,202 ஏக்கர் நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும், 3 போகம் விளையும் 2,681 ஏக்கர் விவசாய நிலங்களையும் 381 நீர்நிலைகளையும் காப்பதற்காகவே இத்திட்டம் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவித்த அவர், ‘ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை’க்காக அப்பகுதியில் நிலங்களை வாங்கிக்குவித்து கருப்பு பணம் சேர்த்தவர்களே இத்திட்ட ரத்தை எதிர்ப்பதாகக் கடுமையான குற்றச்சாட்டை வைத்தார். இந்த விமர்சனத்திற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. உறுப்பினர் தங்கம் தென்னரசு, “ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை என்று நீங்கள் சொன்னால், வேறு எந்த லாட்டரி மருமகனுக்காக புதிய விமான நிலையத்தை அமைக்கப் போகிறீர்கள் என நான் கேட்கட்டுமா?” என்று பதிலடி கொடுத்ததால் அவையில் கடுமையான சலசலப்பு உருவானது.
தொடர்ந்து பேசிய தங்கம் தென்னரசு, விரிவான தொழில்நுட்ப ஆய்வுகளுக்குப் பிறகே பரந்தூர் தேர்வு செய்யப்பட்டதாகவும், எந்த இடத்தில் விமான நிலையம் அமைத்தாலும் நில கையகப்படுத்துதலின் போது பாதிப்புகள் வரத்தான் செய்யும் என்றும் வாதிட்டார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் கீர்த்தனா, கையகப்படுத்தப்பட்ட நிலங்களைக் கொண்டு மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாத வகையில் புதிய திட்டங்கள் தொடங்கப்படும் என்றும், பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைந்தால் சென்னையில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். இவ்வாறு பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மையமாக வைத்து அவையில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன.
