LATEST NEWS
“நயன்தாரா, திரிஷாவை தலைவியா வச்சிருந்தா எப்பவோ ஜெயிச்சிருப்போம்…” முதலமைச்சரே ஒரு வெள்ளைத்தாள் தான்..! தவெக அரசை வெளுத்து வாங்கிய நல்லசாமி.!!
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த கள் இயக்க தலைவர் நல்லசாமி, தமிழக அரசு மற்றும் தவெக நிர்வாகிகள் குறித்து பல்வேறு பரபரப்பான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பயனற்ற மற்றும் தேவையற்ற இலவசத் திட்டங்களுக்கு அரசு நிதி செலவிடப்படுவதாகச் சாடிய அவர், இத்தகைய செயல்கள் நாட்டை பின்னோக்கி மட்டுமே கொண்டு செல்லும் என்றும், தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து அரசு செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், காலநிலை மாற்றம் மற்றும் நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
காவிரி நீரைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சேலம் நான்கு ரோடு பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த நல்லசாமி, கள்ளுக்கான தடை நியாயமானது என யாராவது நிரூபித்தால் அவருக்கு ரூ.10 கோடி வழங்கத் தயாராக இருப்பதாகச் சவால் விடுத்தார். தொடர்ந்து பேசிய அவர், “நயன்தாரா, திரிஷா அல்லது கீர்த்தி சுரேஷை எங்கள் இயக்கத்தின் தலைவியாக வைத்திருந்தால் எப்பவோ ஜெயித்திருப்போம்” என்று விமர்சித்ததோடு, 1967 முதல் நடிகர்களே நாடாள்வதால் ‘தமிழ்நாடு’ என்பதற்குப் பதிலாக ‘நடிகர்கள் நாடு’ என்றே பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம் என்று காட்டமாகத் தெரிவித்தார். அத்துடன் சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா போன்றோருக்கும் தற்போது அரசியல் ஆசை வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
காவிரி நீர் விவகாரத்தில் அரசுக்கும் தவெக நிர்வாகிகளுக்கும் போதிய புரிதல் இல்லை என்று சாடிய நல்லசாமி, “புஸ்ஸி ஆனந்திடம் பேசிப் பார்த்தேன், அவருக்கு புரிதலே இல்லை; அவர் ஒரு வெள்ளைத்தாள். சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், ஏன் முதலமைச்சரே ஒரு வெள்ளைத்தாள் தான்” என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மேலும், 28 ஆண்டுகால சட்டப் போராட்டத்தில் தமிழக அரசு என்ன புரிதலோடு வழக்கை நடத்தியது என்று கேள்வி எழுப்பிய அவர், சட்டப்பேரவையில் தற்போது ‘பாட்டுக்கு பாட்டு’ பாடுவதாகவும், அடுத்து ‘இசைத்தட்டு நடனம் (ரெக்கார்டன்ஸ்)’ நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் தெரிவித்தார்.
