LATEST NEWS
“சீமான் ஒரு சின்னப்பையன்… 2029-ல நாதக கட்சி தமிழ்நாட்டில் உயிரோடவே இருக்காது…! நாஞ்சில் சம்பத் அதிரடி அட்டாக்..!!”
தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையானது, நாம் தமிழர் கட்சியின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அக்கட்சியின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். த.வெ.க சார்பில் நடைபெற்ற பல்வேறு கொள்கை விளக்கப் பொதுக்கூட்டங்களில் பேசிய அவர், த.வெ.க தலைவர் விஜய்யின் வருகை தமிழக அரசியலை முற்றிலும் மாற்றியமைக்கும் திறன் கொண்டது என வலியுறுத்தியுள்ளார்.
இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரின் ஆதரவும் த.வெ.கவுக்குப் பெருமளவில் கிடைத்து வருவதாகக் குறிப்பிட்ட நாஞ்சில் சம்பத், இதன் காரணமாக நாம் தமிழர் கட்சியின் அரசியல் செல்வாக்கு சரிவைச் சந்தித்து வருவதாகக் குற்றம்சாட்டினார். த.வெ.கவின் இந்த எழுச்சியால் நாம் தமிழர் கட்சி தற்போது கல்லறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதாகவும், இனி அதை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும் அவர் சாடினார்.
மேலும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானைச் “சின்னப்பையன்”, “சில்லறை” என கடுமையாக விமர்சித்த நாஞ்சில் சம்பத், அக்கட்சி தமிழக அரசியலில் ஒரு தற்காலிக நிகழ்வாக மட்டுமே இருந்துவிட்டு மறையும் என்றார். அத்துடன், வரும் 2029 பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி என்ற ஒன்று உயிரோடு இருக்காது என்றும் அவர் அழுத்தமாகக் கூறியுள்ளார்.
