LATEST NEWS
“இதயமே வெடிச்சுடும் போல…” மருத்துவரின் அலட்சியமா..? எதிர்பாராத விபரீதமா..? 18 மாதக் குழந்தையின் உயிரைப் பறித்த மயக்க மருந்து… நடந்தது என்ன..?!
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் எரமம்-குட்டூர் பகுதியைச் சேர்ந்த டி. சூரஜ் – விஜிஷா தம்பதியரின் ஒரே மகனான தேவன்ஷ் சௌர்யா என்ற 18 மாதக் குழந்தை, கடந்த ஜூலை 5 அன்று வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே விழுந்து உதட்டில் காயம் ஏற்பட்டது. குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு, பய்யன்னூரில் உள்ள பேபி மெமோரியல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு குழந்தைக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு உதட்டில் தையல் போடப்பட்டது. ஆனால், மயக்க மருந்து கொடுக்கப்பட்ட பிறகு குழந்தை தன் சுயநினைவை இழந்தது.
சுயநினைவை இழந்த குழந்தை உடனடியாக கண்ணூரில் உள்ள மற்றொரு பேபி மெமோரியல் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், துரதிர்ஷ்டவசமாக வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் குழந்தை உயிரிழந்தது. மருத்துவரின் அலட்சியமே தன் குழந்தையின் மரணத்திற்குக் காரணம் என்று கூறி குடும்பத்தினர் புகார் அளித்தனர். இதன்பேரில், அஞ்சலி பொதுவால் என்ற மருத்துவர் மீது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்படுதல் (BNS பிரிவு 125) என்ற சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இருப்பினும், மருத்துவமனை நிர்வாகம் இந்த அலட்சியக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. மயக்க மருந்து கொடுக்கப்பட்டவுடன் எதிர்பாராதவிதமாக குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், முறையான மருத்துவ நெறிமுறைகளைப் பின்பற்றியே சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மயக்க மருந்து செலுத்தும்போது சில நேரங்களில் இத்தகைய எதிர்பாராத சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்றும், குழந்தையின் உயிரைக் காப்பாற்ற தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்ததாகவும் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
