LATEST NEWS
“நம்பிக்கையை மட்டும் விடாதீங்க..!” 5 வருஷத்துக்கு அப்புறம் உரிமையாளரிடம் சேர்ந்த செல்ல நாய்க்குட்டி..! அமெரிக்காவில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்.!!
5 ஆண்டுகளுக்கு முன் தொலைந்துபோன நாய் மீண்டும் உரிமையாளருடன் இணைந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. 2021-ஆம் ஆண்டு நெப்ராஸ்காவின் லின்கன் நகரில் உள்ள வீட்டை விட்டுச் சென்ற ‘சாங்’ என்ற நாய், பல மாத தேடலுக்குப் பிறகும் கிடைக்கவில்லை. இதனால் அதன் உரிமையாளர் இன்மாகுலாடா ஜேக்மேன் மிகுந்த மனவேதனையடைந்தார். காலப்போக்கில் ‘செ செ’ என்ற மற்றொரு நாயை வளர்க்கத் தொடங்கினாலும், பழைய சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது தனது பழைய நாயைத் தேடுவதை அவர் நிறுத்தவில்லை.
5 ஆண்டுகள் கழித்து, ஜேக்மேனின் நண்பர் ஒருவர் சமூக வலைதளப் பதிவொன்றை அவருக்கு அனுப்பினார். அதில், லின்கன் நகரில் இருந்து சுமார் 642 மைல்கள் தொலைவில் உள்ள இந்தியானா மாநிலத்தில் உள்ள ஒரு லாரி நிறுத்துமிடத்தின் பின்னால் ‘சாங்’ கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது. உடனே அங்குள்ள ஹென்ட்ரிக்ஸ் கவுண்டி விலங்கு காப்பகத்தை ஜேக்மேன் தொடர்புகொண்டார். ஆனால், இடைப்பட்ட காலத்தில் யாரோ ஒருவர் அந்த நாய்க்குப் புதிய மைக்ரோசிப் பொருத்தியிருந்ததால், சட்டப்படி அவர்களுக்கு 3 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டு பின்னரே நாயை ஒப்படைக்க முடியும் என காப்பக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நல்வாய்ப்பாக, அந்த அவகாச காலத்தில் வேறு யாரும் நாய்க்கு உரிமை கோரி வரவில்லை. இதையடுத்து ஜேக்மேன் உடனடியாக இந்தியானாவுக்கு நேரில் சென்று தனது நாயை மீட்டு வந்தார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்ததால் தொடக்கத்தில் சற்று குழப்பமடைந்த ‘சாங்’, பின்னர் தன் பழைய உரிமையாளரை அடையாளம் கண்டு மகிழ்ச்சியில் குரைத்து அவரை கட்டிப்பிடித்துக் கொண்டது. “நம்பிக்கையை எப்போதும் இழக்காதீர்கள்; 5 ஆண்டுகள் கழித்தும் எங்கள் நாய் எங்களுக்குக் கிடைத்துவிட்டது” என்று ஜேக்மேன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
