LATEST NEWS
“வளைகாப்பு முடிந்து தாய் வீட்டிற்கு வந்த கர்ப்பிணி…” மாடியில் இருந்து தவறி விழுந்து…! சிசுவுடன் உயிரிழந்த தாய்… கதறும் குடும்பத்தினர்…!!
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை. உளுந்தூர்பேட்டை காவல்துறையில் பணிபுரிந்து வரும் இவருக்கும், யுவஸ்ரீ (29) என்ற பெண்ணுக்கும் திருமணமாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அண்மையில் வளைகாப்பு விழா முடிந்து, பெரியசெவலையில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு நிறைமாதக் கர்ப்பிணியான யுவஸ்ரீ அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் மாலை வேளையில் வீட்டின் மொட்டை மாடியில் அவர் நடைபயிற்சி செய்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாகத் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுப் போராடி வந்த யுவஸ்ரீ, இரவு 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அத்துடன் அவரது வயிற்றில் வளர்ந்து வந்த பச்சிளம் சிசுவும் மரணமடைந்தது. இக்கோரச் சம்பவம் குறித்து திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வாளர் அழகிரி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், தாயும் சேயும் ஒன்றாக உயிரிழந்த துயரம் அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.
