CRIME
பிரபல அரசியல் விமர்சகர் ‘காலச்சுவடு’ கலை திடீர் மரணம்.. மதுரையில் சோகம்.. அதிர்ச்சியில் ஊடக உலகம்..!!
பிரபல எழுத்தாளரும், சிறந்த அரசியல் விமர்சகருமான கலை, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் காலமானார். அரசுப் பணியில் இருந்த இவர், எழுத்து உலகத்தின் மீதும், ஊடகத் துறையின் மீதும் கொண்ட அதீத ஈடுபாடு மற்றும் ஆர்வம் காரணமாகத் தனது அரசு வேலையைத் தைரியமாக ராஜினாமா செய்தார். அதன் பிறகு, தமிழ் இலக்கிய உலகில் மிக முக்கியப் பதிப்பகமாக விளங்கும் ‘காலச்சுவடு’ பதிப்பகத்தின் நிர்வாக ஆசிரியராகப் பொறுப்பேற்றுத் தனது சிறப்பான பணிகளை வழங்கி வந்தார். மேலும், பல்வேறு தனியார் தொலைக்காட்சி ஊடகங்களின் நேரடி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று, சமூக மற்றும் அரசியல் சார்ந்த கருத்துகளைத் துணிச்சலோடு முன்வைத்து மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார்.
அரசியல் மற்றும் இலக்கிய வட்டாரத்தில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த இவரது மறைவு செய்தி, அவரது வாசகர்கள் மற்றும் ஊடகத்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கலை அவர்களின் மறைவுக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். தமிழ் இலக்கிய உலகிற்கும், ஊடக விவாத தளங்களுக்கும் இவரது மறைவு ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.
