LATEST NEWS
நள்ளிரவு 4:30 மணிக்கு பயங்கரம்.. கையில் ‘அந்த’ பொருளுடன் அரசு மருத்துவமனைக்குள் நுழைந்த சைக்கோக்கள்.. அலறியோடிய மருத்துவர்கள், செவிலியர்கள்.. வைரலாகும் திகில் வீடியோ..!!
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள அரசு டூன் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்குள் நேற்று அதிகாலை 4:30 மணியளவில் இரண்டு நபர்கள் கையில் பெரிய அரிவாளுடன் நுழைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரு வேறு நோயாளிகளின் உதவியாளர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, ஒரு தரப்பினர் ஆயுதங்களுடன் வந்து மிரட்டியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்குள்ள காவல் புறக்காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது போன்ற சம்பவங்கள் இதற்கு முன்பும் நடந்துள்ளதாகக் கூறிய மாநகர காவல் கண்காணிப்பாளர் அங்குள்ள காவல் அவுட்போஸ்ட்டை மேலும் பலப்படுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்தச் சம்பவம் மருத்துவமனையின் பாதுகாப்பு குறித்துப் பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது. நள்ளிரவு நேரத்தில் எவ்வித அச்சமும் இன்றி ஆயுதங்களுடன் இருவர் அவசர சிகிச்சை பிரிவுக்குள் நுழைந்தது அங்கிருந்த பாதுகாப்பு குறைபாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அந்த இரவுப் பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நோயாளிகளின் பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு என்ற அச்சம் எழுந்துள்ளது. நோயைக் குணப்படுத்தும் அவசர சிகிச்சை பிரிவு என்பது ஒரு மருத்துவமனையில் மிகவும் பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டுமே தவிர, ஆயுதங்களுடன் சமூக விரோதிகள் சர்வசாதாரணமாக உலா வரும் இடமாக மாறக்கூடாது எனப் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
