CRIME
“கடை மாறினா சும்மா விட்டுருவோமா..?” பழைய பூக்கடை ஓனர்களின் கொடூர மிரட்டல்.. நடுரோட்டில் 48 வயது ஊழியர் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில், வேலை பார்த்து வந்த பழைய பூக்கடை உரிமையாளர்களின் தொடர் மிரட்டலால் மனமுடைந்த 48 வயதான ஊழியர் கணேசன் என்பவர் நடுரோட்டில் தீக்குளித்து, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோவில் சன்னதி தெருவில் உள்ள ஒரு பூக்கடையில் நீண்ட நாட்களாக கணேசன் வேலை பார்த்து வந்துள்ளார். சமீபத்தில் அவர் அந்த கடையிலிருந்து விலகி, அதே பகுதியில் உள்ள மற்றொரு பூக்கடைக்கு வேலைக்கு மாறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பழைய கடையின் உரிமையாளர்கள், கணேசன் தங்களிடம் வாங்கிய முன்பணத்தை உடனடியாகத் திருப்பித் தர வேண்டும் எனக் கூறி அவரைத் தொடர்ந்து மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தத் தொடர் மிரட்டல்களால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான கணேசன், நேற்று முன்தினம் அந்தப் பூக்கடையின் முன்பே தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், தீயை அணைத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கணேசன், உடல்நிலை மோசமடைந்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள திருப்பரங்குன்றம் போலீசார், கணேசனைத் தற்கொலைக்குத் தூண்டியதாகப் பழைய பூக்கடை உரிமையாளர்கள் மற்றும் தொடர்புடைய நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
