LifeStyle
ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிக்கு முற்றுப்புள்ளி…! பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எளிய வீட்டு வைத்தியங்கள்…. டாக்டர் சொல்லும் அட்வைஸ்…!!
பெண்களின் மாதவிடாய் உதிரப்போக்கின் அளவு, நிறம் மற்றும் நாட்கள் ஆகியவை வெறும் ரத்தப்போக்கு மட்டுமல்லாமல், அவர்களின் உடலின் ஹார்மோன் சமநிலை, ஊட்டச்சத்து குறைபாடு, மன உளைச்சல் போன்ற பல்வேறு ஆரோக்கியக் காரணிகளைப் பிரதிபலிக்கும் முக்கிய சமிக்ஞைகளாக விளங்குகின்றன. இது குறித்து மருத்துவர் பிரபாகர் ராஜ் வெளியிட்டுள்ள விழிப்புணர்வுத் தகவலில், மூன்று நாட்களுக்கும் குறைவாகக் குறுகிய காலம் ஏற்படும் உதிரப்போக்கிற்குப் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் குறைபாடே காரணம் என்றும், இதனைத் தவிர்க்கக் கடுமையான டயட்களைக் கைவிட்டு நெய், நட்ஸ் மற்றும் வைட்டமின்-சி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல், உடலில் ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பதால் நேரிடும் அதிகப்படியான உதிரப்போக்கு மற்றும் ரத்தக்கட்டிகள் போன்ற கோளாறுகளைக் குணப்படுத்த நார்ச்சத்துள்ள முட்டைக்கோஸ், புரோக்கோலி போன்ற காய்கறிகளையும், ஆளி விதைகளையும் தினசரி உணவில் சேர்த்துக்கொண்டு சர்க்கரையின் அளவைக் குறைக்க வேண்டும்.
மாதவிடாய் சுழற்சி துவங்குவதற்கு முன்பே ரத்தக் கசிவு ஏற்படுபவர்கள், வைட்டமின் பி6 நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதோடு இரவில் சீக்கிரம் உறங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உடலின் ஆற்றல் குறைந்து மாதவிடாய் தள்ளிப்போகும் அல்லது வராமல் இருக்கும் குறைபாடு உள்ள பெண்கள், தீவிர உடற்பயிற்சிகளைத் தவிர்த்து எளிய நடைப்பயிற்சி மேற்கொள்வதுடன், அஸ்வகந்தா மற்றும் காலை வெயிலில் நேரத்தைச் செலவிடுவது நல்ல பலனைத் தரும்.
இறுதியாக, அடிவயிற்றில் ஏற்படும் அழற்சி காரணமாகத் தீவிர வலியுடன் கூடிய மாதவிடாயைச் சந்திப்பவர்கள் ஒமேகா-3 மற்றும் மெக்னீசியம் நிறைந்த உணவுப் பொருட்களைத் தங்களது அன்றாடப் பட்டியலில் சேர்த்துக் கொள்வதுடன், ஒத்தடம் கொடுப்பதன் மூலம் இப்பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
