LATEST NEWS
5 நாளா தண்ணி இல்லை… கழிவுநீர் குடித்து வாழும் அவலம்..! 7 பேர் பலியான பிறகும் மாறாத அலட்சியம்… மாணவர்களின் வயிற்றிலடிக்கும் தரகர்கள்… டெல்லி உயர்நீதிமன்றத்தின் அதிரடி சம்மன்…!!
புதிய டெல்லியின் சத்யா நிகேதன் பகுதியில் பேயிங் கெஸ்ட் விடுதி இடிந்து விழுந்து 6 மாணவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்த சோக சம்பவம், கல்விக்காக தலைநகர் வரும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது. சுகாதாரமற்ற சூழல், பாதுகாப்பற்ற நீர், மற்றும் வீட்டு உரிமையாளர்கள்-தரகர்களின் சுரண்டல்களுக்கு மத்தியில் மாணவர்கள் தங்களின் வாழ்நாளைக் கழிக்கும் அவலம் தொடர்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழைய ராஜேந்திர நகர் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கி 3 யுபிஎஸ்சி தேர்வர்கள் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகும், தற்போது கரோல் பாக் போன்ற பகுதிகளில் ஆபத்தான மின் கம்பிகள் மற்றும் நீர்க்கசிவுடன் பாழடைந்த நிலையில் தரம் குறைந்த தங்குமிடங்கள் இயங்கி வருகின்றன.
அங்கு தங்கியிருக்கும் மாணவர்கள் சிறை போன்ற வாழ்க்கையை வாழ நிர்பந்திக்கப்படுகிறார்கள். குறுகலான படிக்கட்டுகள், சிறிய அறைகள், சாம்பல் நிறத்தில் கழிவுநீர் போல வரும் குடிநீர் மற்றும் 5-6 நாட்களுக்குத் தண்ணீர் இல்லாத நிலை ஆகியவை அவர்களின் அன்றாடப் போராட்டமாக மாறியுள்ளன. அரசாங்கம் சாலைகளை மட்டும் ஆய்வு செய்யாமல் கட்டிடங்களுக்குள் வந்து பார்க்க வேண்டும் என்றும், உரிமையாளர்களின் ஆடம்பர வாழ்க்கைக்கு மாறாகத் தாங்கள் அபாயகரமான சூழலில் வாழ்வதாகவும் அங்குள்ள தேர்வர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்றம், நகரில் உள்ள பேயிங் கெஸ்ட் விடுதிகளின் சட்டப்பூர்வ நிலை மற்றும் நிலவரம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. வெளியூரிலிருந்து வரும் மாணவர்களே நாட்டின் எதிர்காலம் என்றும், அவர்கள் வாழும் இடம் பரிதாபகரமாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், அரசாங்கம் தன் பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது எனக் கூறி, மாணவர் விடுதி வசதிகளில் முதலீடு செய்ய வலியுறுத்தியுள்ளது.
