LATEST NEWS
தகுதியுடைய மக்களே..! “ஒரு துளி ரத்தம் கொடுங்க… உயிர்களைக் காப்பாற்றுங்க” ரத்ததானம் செய்ய தமிழக அரசு அழைப்பு..!!
தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தை முன்னிட்டு, 18 வயது முதல் 65 வயது வரை உள்ள தகுதியுடைய அனைவரும் தங்களாகவே முன்வந்து ரத்த தானம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டிற்கான ரத்த தான தினத்தின் மையப்பொருள் “மனிதநேயத்தின் ஒரு துளி ரத்தம் கொடுங்கள். உயிர்களைக் காப்பாற்றுங்கள்” என்பதாகும். கடந்த 2025-2026 ஆம் ஆண்டில் மட்டும் மாநிலத்தில் உள்ள 359 ரத்த மையங்கள் மூலமாக 9,53,638 ரத்த அலகுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது
சேகரிக்கப்படும் முழு ரத்தமானது தேவைக்கேற்ப சிவப்பணுக்கள், பிளாஸ்மா போன்ற பல்வேறு கூறுகளாகப் பிரிக்கப்பட்டு நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதில் சிவப்பணுக்களை 35 முதல் 42 நாட்கள் வரையிலும், பிளாஸ்மாவை ஒரு ஆண்டு வரையிலும் சேமித்து வைக்க முடியும் என்பதால், ஒருமுறை செய்யப்படும் ரத்த தானம் ஓராண்டு வரை பல உயிர்களைக் காக்க உதவுகிறது. மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 1 சதவீத மக்களுக்காவது ரத்த இருப்பு இருப்பதை உறுதி செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, ரத்த தானத் திட்டத்தை வலுப்படுத்த சட்டமன்றத்தில் 3 புதிய முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதன்படி, தமிழ்நாடு அரியவகை ரத்தப் பிரிவு கொடையாளர் பதிவேடு உருவாக்குதல், மாவட்ட அளவிலான ஆண்டு ரத்த தான முகாம் அட்டவணையை உறுதிப்படுத்துதல் மற்றும் கல்லூரிகளில் ரத்தக் கொடையாளர் மன்றங்களை ஏற்படுத்துதல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரிய ரத்தப் பிரிவு கொண்ட நோயாளிகளுக்கும் உரிய நேரத்தில் தங்கு தடையின்றி ரத்தம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
