LATEST NEWS
“2 மணி நேரம் நரக வேதனை… லேண்ட் ஆகியும் மருத்துவ உதவி இல்லை..!” ஏர் இந்தியா பயணிகளின் கதறலும் கோபமும்..!!
தாய்லாந்தின் புக்கெட்டில் இருந்து புதுடெல்லி நோக்கி 137 பயணிகள் மற்றும் 8 ஊழியர்களுடன் பயணித்த ஏர் இந்தியா AI2379 விமானம், வான்வெளியில் கடுமையான காற்றுக் கொந்தளிப்பில் சிக்கியது. இதனால் விமானம் கடுமையாகக் குலுங்கியதில் பயணிகள் பலர் காற்றில் தூக்கி வீசப்பட்டு, மேலே மோதி காயமடைந்தனர். இறுதியில் விமானம் டெல்லியில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்ட போதிலும், 4 பணியாளர்கள் உட்பட மொத்தம் 17 பேர் காயமடைந்ததாக ஏர் இந்தியா நிறுவனம் உறுதி செய்துள்ளது.
இந்தச் சம்பவத்தின் போது விமானத்தில் பயணித்த பெண் பயணி ஒருவர், சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுத் தனது பயங்கர அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். “இது என் வாழ்வின் மிக மோசமான இரண்டு மணி நேரம்; நாம் உயிரோடு தப்பிப்போமா என்றே பயந்துவிட்டேன்” என்று குறிப்பிட்டுள்ள அவர், இருக்கை பட்டை சிக்னல் அணைக்கப்பட்டிருந்தாலும் பயணிகள் எப்போதும் சீட்பெல்ட் அணிந்திருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், பதற்றமான சூழலில் விமானப் பணிப்பெண்கள் பயணிகளை இருக்கையிலேயே அமருமாறு அலறும் குரலும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
https://www.instagram.com/reel/Dbnk0k-TLjb/?utm_source=ig_web_button_share_sheet
மற்றொரு பயணியான சில்பி ஜெயின் என்பவர், விமான நிறுவனத்தின் நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்துள்ளார். விமானம் தரையிறங்கிய பிறகு காயமடைந்தவர்களுக்குக் காலப்போக்கில் மருத்துவ உதவி வழங்கப்படவில்லை என்றும், நிறுவனத்தின் பெயருக்குக் களங்கம் ஏற்படும் என்பதால் வீடியோக்களைச் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என ஊழியர்கள் தங்களைக் கேட்டுக்கொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இச்சம்பவம் குறித்துப் இந்திய விமானப் போக்குவரத்து தலைமை இயக்ககம் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
